தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கடந்த (06.09.2025) சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்ற அவர் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்குக் காவல் துறையில் அனுமதி கேட்கும் கடிதத்தைக் கோவிலில் வைத்து சிறப்புப் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குத் திரண்டனர். அதாவது த.வெ.க. நிர்வாகிகள் பலர் திருச்சி - புதுக்கோட்டைச் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அங்கிருந்த போலீசார் அந்த வாகனங்களை எடுக்க அறிவுறுத்தியும் அக்கட்சியினர் எடுக்காமலும், போலீசாரைப் பணி செய்ய விடாமலும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சட்ட விரோதமாக ஒன்று கூடிப் பிரச்சனை செய்ததன் காரணமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுழுக்கு கரிகாலன், அக்கட்சியின் நிர்வாகிகளான வெள்ளைச்சாமி, துளசி மணி, செந்தமிழ், மோசஸ் உள்ளிட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியர்களின் உத்தரவைப் பின்பற்றாமல் நடப்பது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் விமான நிலைய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/09/a5149-2025-09-09-10-51-46.jpg)
வரும் 13ஆம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை விஜய் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர்.என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரச்சாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர்என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.