'DMK is the one who gives content to some parties; we are the one who will do it for the 7th time' - MK Stalin's speech Photograph: (dmk)
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் திமுக நிர்வாகிகள் மாநாடு இன்று நடைபெற்றது.
Advertisment
திமுகவினர். முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிடும் பொருட்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடுகள் எனத் தொடர்ச்சியாக பல்வேறு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளது திமுக. இந்நிலையில் இன்று மாலை திருச்சி சிறுகனூர் மாநாடு தொடங்கியது. திமுக அமைச்சர்கள் மேடையில் குவிந்த நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வரவேற்புடன் மேடைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Advertisment
அவரது உரையில், ''எல்லா சாலைகளும் திருச்சியை நோக்கி. எல்லா மக்களும் திருச்சியை நோக்கி. திரும்பும் திசை எல்லாம் கருப்பு சிவப்பு. திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள். திரும்பும் திசை எல்லாம் கலைஞரின் உடன்பிறப்புகள். தமிழ்நாடு முழுக்க இருக்கும் தொண்டர்கள் திரண்டு திருச்சி சிறுகனூர் பெருகனூராக மாறியுள்ளது. இந்த சேனையினுடைய தலைமை தொண்டனாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைப்பை ஏற்று வந்திருக்கக்கூடிய கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய முதல் வணக்கம். வரவேற்பு உரையாற்றிய மாநாட்டின் தலைவர் கே.என்.நேரு, உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வணக்கம்.
உங்களால்தான் நான் வளர்ந்தேன்; உங்களால்தான் உயர்ந்தேன்; உங்களுக்காகத்தான் நான் வாழுகிறேன். உங்களின் மகிழ்ச்சியின் என வயதை குறைத்துள்ளது. நம் பாசப்பிணைப்பு என்பது உடன்பிறப்புகள் என்ற இந்த உயிர்த் துடிப்பு. இதெல்லாம் இன்னைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தமா? திமுக உருவான காலம் தொட்டு 75 ஆண்டுகளாக தொடர்கின்ற அன்பு இது. அண்ணாவும் கலைஞரும் அவர் வழிவந்த நானும் இந்த பாச உணர்வை தான் உங்களிடத்தில் பார்க்கிறேன்.
இன்று நாம் முழங்கும் 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' என்பது ஏதோ தனிப்பட்ட ஸ்டாலினுக்காக முழக்கம் அல்ல. நம்ம எல்லாம் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழக தொடரட்டும் என்பதுதான் இதனுடைய உண்மையான பொருள். திருச்சியை மாநாட்டிற்காக நாம் தேர்ந்தெடுக்கிறோம். இது தமிழ்நாட்டினுடைய மையப் பகுதி மட்டும் அல்ல இதுதான் கழகத்தின் மாநாட்டு பகுதி. இன்றைக்கு நம் நடத்திக் கொண்டிருக்கிறது 12 வது மாநில மாநாடு. இந்த 12 மாநில மாநாடுகளில் ஏழு மாநாடுகள் திருச்சியில் தான் நடந்திருக்கிறது. 1956 இல் இரண்டாவது மாநில மாநாடு, 1990 இல் ஆறாவது மாநில மாநாடு, 1996 இல் எட்டாவது மாநில மாநாடு, 2006 இல் ஒன்பதாவது மாநில மாநாடு, 2014இல் பத்தாவது மாநில மாநாடு, 2021 இல் பதினோராவது மாநில மாநாடு, இப்பொழுது திருச்சியில் பனிரெண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது.
தமிழைக் காப்பாற்றியவர்கள் நாம். தமிழ்நாடு நம்மை நம்பிதான் இருக்கிறது. நாமும் தமிழ்நாட்டை நம்பி தான் இருக்கிறோம். அதற்காகத்தான் சொல்கிறேன் திமுக ஆட்சி தொய்வில்லாமல் தொடர வேண்டும். அதற்கு நாம் உழைக்க வேண்டும். அதற்காகத்தான் சூளுரைக்க வேண்டும். இந்த நேரத்தில் தந்தை பெரியார் 1971 தேர்தலில் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன் 'திமுக ஆட்சியில் தொடர்ந்தால் தான் தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கிற முன்னேற்றம் ஏற்படும்' என்றார். இப்பொழுதும் தந்தை பெரியார் சொன்னதை மனதில் வைத்து நம்முடைய பயணத்தை தொடர வேண்டும். நாம் தான் சூப்பர் ஸ்டேட் என ஒன்றிய அரசே பாராட்டுகிறது. எவ்வளவோ இடையூறுகளுக்கு இடையே கெத்தாக முன்னேறி உள்ளோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே சிறுகனூரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு இன்று தெம்போடு, தைரியமாக நிற்கிறேன். அடுத்து விரைவில் விரிவான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அது வெளியிடப்படும். சமீபமாக கவனித்தீர்களா மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் ஏதோ இன்ஸ்டால்மெண்டில் தேர்தல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். யோசிச்சு பாருங்க நாம் வழங்குகின்ற மகளிர் உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியுமா? முடியவே முடியாது. அப்படி அவர்கள் நினைத்தாலே வீட்டு பெண்கள் மாற்று கட்சிக்கு ஓட்டு போட மாட்டார்கள். அதனால் தான் இப்பொழுது அதிகப்படுத்துவோம் என அதிகரிக்கிறார்கள். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை யாராவது கை வைக்க முடியுமா? அந்த குழந்தைகளை பட்டினி போட்டால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா விட மாட்டார்கள். அதேபோல் பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தை அவர்களால் மாற்ற முடியுமா? முடியாது. இன்னும் இருக்கிறது. உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கிற புதுமைப்பெண் திட்டம். தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் இதையெல்லாம் தடுக்கவோ நிறுத்தவோ எந்த கட்சியாலும் யோசிக்க முடியுமா?
இப்படி எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை கொடுப்பதில்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திட்டங்கள். அவர்களுக்கு தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே இந்த ஸ்டாலினின் திட்டங்கள் தான். அதனால் தான் உறுதியோடு சொல்கிறேன் இந்த தமிழ்நாடு இருக்கிற வரைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை ஆளுவான். நாம் இவ்வளவையும் செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால் அதிமுக கூட்டணி சாரி சாரி அப்படி சொன்னால் அமித்ஷா, மோடி கோபித்துக் கொள்வார்கள். 'என்டிஏ' கூட்டணி என்று சொல்ல வேண்டும். கூட்டணிக்கு பெயர் வைக்க கூட முடியாத நிலையில் தான் அதிமுக இருக்கிறது. அவர்கள் சொல்கின்ற மாதிரி அந்த என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு தர வேண்டிய கல்வி நிதி, ஜல் ஜீவன் திட்ட நிதி,100 நாள் வேலை திட்ட நிதி, பேரிடர் நிவாரண நிதி என நாம் கேட்ட எதையும் தரவில்லை. மாநிலத்திற்கான சிறப்பு திட்டங்களையும் தரவில்லை. கோவை, மதுரை, திருச்சி இந்த மாவட்டங்களில் மெட்ரோ உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் அனுமதி தரவில்லை. நன்மை செய்ய வேண்டும், ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால் அடிப்படையாக மாநிலத்திற்கு கேட்ட நிதியை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும் .
தேர்தல் வருகிறது என்று தெரிந்துகூட அதை அறியாமல் நமக்காக எதையும் அறிவிக்காதவர்கள் பாஜக. இப்படி திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கிற என்டிஏ கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? எந்த நம்பிக்கையில் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறீர்கள். தமிழ்நாடு கேட்பதெற்கெல்லாம் 'நோ' சொல்லுகிறவர்களுக்கு தமிழ்நாடு 'நோ' தான் சொல்லும். இங்கே எப்பொழுதும் உங்களுக்கு 'நோ' தான். திராவிட மாடல் 2.0 விற்கு நான் ரெடி நீங்கள் ரெடியா? நம்முடைய வெற்றி திமுகவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றி. அதை உணர்ந்து உழைக்க வேண்டும். ஏழாவது முறையாகும் நாம் தான். இனி எப்பொழுதும் நாம் தான். திருச்சி எழுச்சி தமிழ்நாடு எங்கும் பரவட்டும். திராவிட மாடல் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். மீண்டும் வெல்வோம்.வெல்வோம் ஒன்றாக நன்றி வணக்கம்'' என்றார்.
Follow Us