விவசாயிகள் படும் சிரமங்களை கண்டுகொள்ளாமல் கோமாளித்தனமாக திமுக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், 'டெல்டா பகுதியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய திமுக அரசு தவறியதால், கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல், மழையில் நனைந்து வீணாவதை சுட்டிக்காட்டி அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்பிய பின்னரும், விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், 22.10.2025 அன்று நான் டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகள் படும் துயரத்தையும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல்மணிகள் குவியலாக குவிக்கப்பட்டு முளைவிட்டு இருந்ததையும், இந்த தீபாவளி, விவசாயிகளின் கண்ணீர் தீபாவளியாக மாறியதையும் சுட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க இந்த அரசை வலியுறுத்தினேன்.

Advertisment

நான், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுடன் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் படும் துயரை எடுத்துக் கூறிய பிறகும், விளம்பர மாடல் திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேட்டி அளிக்கிறார். ஆனால், விவசாயத் துறை அமைச்சரோ 16 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று பேட்டி கொடுக்கிறார்.

உணவுத் துறை அமைச்சர் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறுகிறார்.அரசு, கும்பகர்ண தூக்கத்தில் இருந்த இந்த விடிய திமுக இப்போது 150 அலுவலர்களுக்கு மேல் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.

Advertisment

நாட்டில் என்ன நடக்கிறது ? களத்தில் உள்ள பிரச்சனை என்ன? என்பதைக் கூட அறிந்து கொள்ளாத முதலமைச்சர், இன்று தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டின் துரதிஷ்டம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் ஒருசில பத்திரிகைகளும், ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்றை கேட்டுக்கொண்டு இன்று மௌனமாக இருக்கின்றனர்.

குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படுவதற்குப் போராடுவதாகக் கூறும் கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட நெல் கொள்முதலில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. நான், நேற்று டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று நெல் கொள்முதலில் விவசாயிகள் படும் வேதனையை ஊடகங்களில் வெளிப்படுத்தினேன்.

அதன்படி விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதில், நான் விவசாயிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்திவிட்டேன் என்று திமுக அமைச்சர்களுக்கு ஆத்திரம் வருகிறது. அவர்களது கோமாளித்தனமான கருத்துகள் இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியாகி உள்ளது. அதில் விவசாயத் துறை அமைச்சர் கூறுகிறார். அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல்மணிகள், இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன என்கிறார். நெல் சிறிதளவு முளைத்தால் என்ன? நாத்து நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்துவிட்டாலே அது வீண் தானே.

அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்ததாகவும், இப்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 1000 மூட்டைகளாக உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டது. 2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கொள்முதல் செய்வது 800 மூட்டையாகக் குறைத்தது இந்த அரசு. கொள்முதல் விளைச்சலை ஒட்டித்தான் அமையும்.

கூடுதலாக நெல் வந்தால் வாங்கத்தானே வேண்டும். மேலும், கொள்முதல் செய்த மூட்டைகளை அடுக்க இடம் இல்லை, சாக்கு இல்லை என்று ஒரு நாளைக்கு 800 மூட்டைகளைக் கூட கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது இந்த அரசு.எடுத்தவுடன் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது. முதலில் டோக்கன் பெற வேண்டும்; நெல்மணிகளைத் தூற்ற வேண்டும்; எடை போட வேண்டும்; அதன் பின்பு தான் கொள்முதல் பணிகள் முடியும். அதற்குத் தேவையான அளவு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் வேண்டும்.

ஈரப்பதம், குப்பை எல்லாம் பார்க்காமல் தனியார் நெல் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்ட விவசாயிகளே, விவசாயத் துறை அமைச்சரின் அறிக்கையை மீண்டும் படித்துப் பாருங்கள். எவ்வளவு கோமாளித்தனமான பதில் ? இவருக்குதான் இந்த வழிமுறை தெரிந்தது போல பேசி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, இவர் விவசாயிகளை எவ்வளவு கேவலப்படுத்துகிறார் என்பதையும் காட்டுகிறது. உணவுத்துறை அமைச்சர் இதற்கு ஒருபடி மேலே சென்று செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை; இதுதான் பிரச்சனைக்குக் காரணம் என்கிறார். ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்று நான் விவரத்தைக் கூறினால் அது பொய் என்கிறார்.

இந்த அரசுக்கு, குறுவை சாகுபடி எவ்வளவு பரப்பு செய்யப்பட்டது என்று முன்கூட்டியே தெரியும்; எவ்வளவு நெல் விளைச்சல் என்பது தெரியும்; டெல்டா பகுதியில் தனியார் பெரும்பாலும் கொள்முதல் செய்வதில்லை என்பது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். குறுவை கொள்முதல் சமயம், அதிக ஈரப் பதம் இருக்கும் என்பதும், ஆண்டுதோறும் மத்திய அரசை வலியுறுத்தி 22 சதவீதம் வரை ஈரப் பதம் உள்ள நெல்லை தளர்வு செய்து வாங்க முன்அனுமதி பெற வேண்டும் என்பதும் இந்த அரசுக்குத் தெரியும். இப்படி ஆண்டுதோறும் அனுமதி பெற்றுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, இவற்றையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு, நெல் கொள்முதலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதுடன், அதிக அளவு வரும் நெல்லை சேமிக்க தற்காலிக குடோன்களை அமைத்து, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்திருக்க வேண்டாமா இந்த அரசு ? விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை பாதுகாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையல்லவா?

விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை என்பதைக் கூட உணரவில்லை இந்த திமுக விளம்பர மாடல் அரசு. டெல்டா மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள். முதலமைச்சரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவான ஊடகங்களையோ, பத்திரிகைகளைப் பார்த்தோ தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை; நேரில் சென்றும் பார்ப்பதில்லை.

இவர்களுக்கென்று ஒரு உலகம். அதில் இவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள், உளவுத் துறை, ஊடகங்கள், பத்திரிகைகள். மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு, கனவு உலகத்தில் வாழும் இவர்களை நம்பிய விவசாயிகளும், மக்களும் தான் ஏமாறுகிறார்கள்.

இனியாவது இந்த அரசு விழித்துக் கொண்டு, என் மீது பாய்வதை விட்டுவிட்டு, விவசாயிகள் கடன் வாங்கி, வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்வதுடன், முளைவிட்ட நெல்மணிகளை வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்டு கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும்; மேலும், டெல்டா மற்றும் பல மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் அண்மையில் நடவு செய்த நெற்பயிர்கள் சமீபத்திய கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதையும் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு விடியா திமுக விளம்பர மாடல் அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.