'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக நீலகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று குன்னூரில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக கூடலூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிப் பேசுகையில், '' மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2021 ஆம் தேர்தலில் திமுக சார்பில் 525 வாக்குறுதிகளை அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அது உண்மையா? வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்களா? வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுவதில் ரோல் மாடல் திமுக.
போட்டோ சூட் செய்து ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதில் ரோல் மாடல் திமுக. திமுகவில் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிப்பதாக சொல்கிறார்கள். அதில் காங்கிரசினுடைய மேலிடப் பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். 'சாறை குடித்துவிட்டு சக்கையை வழங்குகிறார்கள்' என்று சொன்னார் . அதற்கும் திமுக ரோல் மாடல். திமுகவிற்கு இதெல்லாம் அடையாளம் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் உங்க அப்பாவை புகழ்ந்து பேசுகிறீர்கள். ஸ்டாலின் தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசுகிறார். மக்கள் யாரும் உங்களை புகழ்ந்து பேசவில்லை. மகனை அப்பா புகழ்ந்து பேசுகிறார். அப்பாவை மகன் புகழ்ந்து பேசுகிறார். இதுதான் இன்று தமிழகத்தில் நடக்கும் நிகழ்வு. அது ஒரு குடும்பக் கட்சி. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள் கலைஞர் இருந்தார். அதன் பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவராக ஸ்டாலின் உள்ளார்.
திமுகவின் இளைஞரணி மாநிலச் செயலாளராக உதயநிதி உள்ளார். கனிமொழி மகளிர் அணியின் மாநிலச் செயலாளர். இந்த மூன்று பதவிகளும் கலைஞர் குடும்பத்தில் இருக்கிறது. வேறு எந்த குடும்பத்திற்காவது கொடுத்திருக்கிறார்களா? ஆக அது குடும்ப கட்சி தானே. வாரிசு அரசியல் தானே. கலைஞர் குடும்பம் இருக்கும் வரை எவரும் அந்த கட்சியில் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைக்கலாம் உழைப்பை சுரண்டுகின்ற குடும்பம் மு.க.ஸ்டாலின் குடும்பம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்'' என்றார்.