தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும், திமுக தலைமைக்கு தலைவலியை கொடுக்கும் வகையிலும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை காங்கிரஸ் மத்தியில் ஆதரவு அதிகரித்து வந்ததால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்ததால் அந்த குரல் வலுவிழக்க ஆரம்பித்தது.
இந்த சூழ்நிலையில்,காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என கூறிய விஜய்யிடம், காங்கிரஸ் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேச்சு எழுந்தது. இது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக திமுக பொருளாதார கொள்கையை பிரவீன் சக்கரவர்த்தி கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்களில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் லக்ஷ்மண் ரேகையை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் மீண்டும் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஐபிடிஎஸ் நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கணிப்பில், திமுகவுக்கு 17.07 சதவீத வாக்கும், அதிமுகவுக்கு 15.03 வாக்கும், த.வெ.கவுக்கு 14.20 சதவீத வாக்கும், காங்கிரஸுக்கு 3.10 சதவீத வாக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், “யாருக்கு வாக்கு? ஐபிடிஎஸ் (IPDS) தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன். ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. சீட்டுகளை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமல்ல, அதிகாரப் பங்கீட்டிற்கும் இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/seatsharing-2026-01-05-11-00-15.jpg)