நாங்கள் யாரோடும் கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள், பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.கவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “ஒன்றிய அரசால் தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற அநீதிகளை எடுத்துச் சொல்லியும், தமிழ்நாட்டிற்கு வழங்கக் கூடிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் மறுத்து வருவதையும், கீழடி உள்ளிட்ட நம்முடைய தொன்மைகளை வெளியிடுவதற்கும், காலம் தாழ்த்துவதும், மறுப்பதும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளை தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களுக்கு எதிராக செயல்படுத்தக் கூடிய சூழ்நிலை இந்த நான்கு ஆண்டுகளில், உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திட்ட சாதனை திட்டங்களை, குறிப்பாக கோவை மாவட்டத்தில் இந்த நான்கு ஆண்டுகளில் கோவையில் 10 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வென்று இருந்தாலும் கூட, 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினராக முதல்வரை முன் நின்று கோவை மக்களுக்கு கட்சி திட்டங்களை வழங்கி இருக்கிறார்.
வீடு வாரியாக வாக்காளர்களை சந்தித்து இதனை எடுத்துச் சொல்லி, ஓரணியில் தமிழ்நாடு என்ற கழகத்தின் முன்னெடுப்பை இல்லம் தோறும் கொண்டு சென்று சேர்ப்பதற்கான பணிகளை, வருகிற 3 ம் தேதி காலை 8:00 மணிக்கு 317 பூத்துகளிலும் பூத் வாரியாக, எங்களுடைய இயக்கங்களை சார்ந்து இருக்கிற பூத்த கமிட்டி அணியினர் வீடு வாரியாக சென்று, முன்னெடுக்க இருக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தமிழ்நாட்டினுடைய உரிமைகளை மீட்பதற்கு முதல்வர் எடுக்கக் கூடிய அந்த முன்னெடுப்பு என்பது இந்தியாவில் இருக்கக் கூடிய முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக ஆளுமை மிக்க முதல்வராக விளங்குகிறார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் உரிமைகளை காத்து வருகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடுக்கக் கூடிய முன்னெடுப்புகளை தொடர்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என அனைத்து குடும்பங்களும் இணைய வேண்டும். நம் மீது தாக்கக் கூடிய இந்த தாக்குதல்களை எதிர்த்து நிற்க வேண்டும். எதிர்த்து நின்று நம்முடைய உரிமைகளை கேட்டு பெற வேண்டும். இந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முனைப்பை முதல்வர் என்று தொடங்கி வைத்து இருக்கிறார் என்றார்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்துக் கூற உள்ளோம். பல்வேறு நிதி நெருக்கடிகள் இருந்தாலும் ஒன்றிய அரசு நிதி தராமல் சென்றாலும் கூட முதல்வர், தன்னுடைய அயராது உழைப்பால் இந்தியாவினுடைய அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்று வரலாற்று சிறப்புமிக்க ஒன்றை உருவாக்கி தந்து இருக்கிறார். எனவே முதலமைச்சருடைய வழியில் அவரின் உத்தரவின் அடிப்படையில் கோவையின் மூன்று மாவட்டத்தில், பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. குறைந்த பட்சம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை நிர்ணயித்து, களத்தில் இறங்கி நிறைவு செய்து ஒப்படைக்க இருக்கிறோம் என்று கூறினார்.
த.வெ.க அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்ததாக கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, “நாங்கள் களத்திற்கு சென்ற வரையில் அது போன்ற சூழல்கள் இல்லை, முழுக்க, முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் நம்பிக்கை வைத்து மகளிர் தொடங்கி, குழந்தைகள் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் உள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், இப்படி சாதனை திட்டங்கள் முதல்வர் கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே இளைஞர்கள் எங்களோடு தான் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
மற்ற கட்சியில் இருந்து வந்தவர்களை உடனடியாக துணை முதல்வரை சந்திக்க வைக்கிறார்கள் என்ற பேச்சு குறித்த கேள்விக்கு, “துணை முதல்வர் யார் சென்றாலும் அவர்களை சந்திப்பார். சமூக வலைதளங்களில் பரவும் விஷயங்களை கேட்டுக் கொண்டு பேசக் கூடாது. புதிதாக வந்தவர்கள் பழையதாக வந்தவர்கள என நாங்கள் யாரையும் தவிர்ப்பது இல்லை. நாங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். அதே போல தான் துணை முதல்வர் அனைவரையும் சந்திக்கிறார். பொதுமக்கள் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்கள் என அனைவரையுமே சந்தித்து பேசுகிறார். கடந்த முறை 10 தொகுதிகளில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அந்த பத்து தொகுதிகளும் வெற்றி பெற்று முதல்வருக்கு சமர்ப்பிப்போம். கோவை மக்களும் மகத்தான வெற்றியை வழங்குவதற்கு தயாராக உள்ளார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்” என்று பதிலளித்தார்.
காவலர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “மொழி பிரச்சனை இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? கீழடி குறித்த அவற்றை வெளியிட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனை இருக்குமா ? பழைய தூத்துக்குடி பிரச்சனையை செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பழைய முதல்வர் கூறினார். ஆனால் தற்போதைய முதல்வர் அப்படி ஏதும் கூறினாரா ? உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறுகள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய முதல்வர் தற்போது இருக்கிறார். முடிந்த அளவுக்கு தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். ஒன்றை மறைப்பதற்கு மற்றொரு கருத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தி.மு.க வுக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, “நீட் தேர்வு என்பது மக்கள் வேண்டாம் எனக் கூறும் கருத்து. அது அரசாங்கம் மக்கள் மற்றும் மாணவர்களின் கருத்தும் கூட. அப்பொழுது அந்த கருத்துக்களை நாம் முன்வைக்கும் பொழுது இதற்கும், அதற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. இதில் ஒன்றிய அரசு செய்ய மறுக்கும் போது தி.மு.க அதை கேள்வியாக முன்வைக்கிறது.
மத்திய அரசு சமையல் எரிவாய்க்கு மானியம் கொடுக்கிறேன் என கூறினார்கள், ஆனால் தற்போது மானியம் வருகிறதா ?. தேர்தல் வரை கொடுக்கப்பட்டது தேர்தலுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது. அப்படி தி.மு.க அரசு ஏதாவது திட்டத்தை நிறுத்தியதா ??.. மகளிர் உரிமை தொகை விடுபட்டு இருக்கிறது என சில மகளிர் கோரிக்கை வைத்தார்கள். அதையும் சேர்க்க சொல்லி உத்தரவிட்டார் முதல்வர்” என்றார்.
தூத்துக்குடி சம்பவம் குறித்த கேள்விக்கு, “சட்டமன்றத்தில் முதல்வர், யார்? யார் ? மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்” என்றார்.
தி.மு.க வால் தமிழகத்தின் உரிமைகள் பறி போய் விட்டதாக 7 ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோவையில் சுற்றுப் பயணம் தொடங்குவது குறித்தான கேள்விக்கு, “முதலில் என்ன பறிபோனது என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் உரிமை என்ன பறிபோனது என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தொடங்கிச் சென்ற திட்டங்களையும் கூட தொடர்ந்து நாங்கள் செய்து முடித்து இருக்கிறோம். தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்துக்களை முன் வைக்கிறார்கள். கோயம்புத்தூரை பொறுத்த வரை, போட்டித் தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மையம், பெரியார் நூலகம், நகை தொழில் செய்பவர்களுக்கு தொழில் கூடம், என தொடர்ச்சியாக ஒட்டுமொத்த வளர்ச்சியையும், கோயம்புத்தூருக்கு கொடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியில் பறிபோனதை தி.மு.க முதல்வர் மீட்டுக்கு கொண்டு இருக்கிறார். நாங்கள் யாரோடும் கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள். ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. முதல்வர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்களும் மகளிர் மாணவர்கள் என உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்” என்றார்.
பி.ஜே.பி யை எதிர்த்து தி.மு.க அரசியல் செய்கிறதா ? என்ற கேள்விக்கு, “பி.ஜே.பி யை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க வுக்கு இல்லை. நாங்கள் அவர்களை எதிர்க்கவில்லை அவர்கள் செய்யாத விஷயங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இதை எல்லாம் மக்களுக்கு சொல்லித் தான் ஆக வேண்டும். நாட்டில் நடக்கக் கூடிய நடப்பு மக்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும்” என்று கூறினார்.
பத்து தொகுதிகளையும் கோவையில் கைப்பற்றுவதற்கு என்ன செயல் திட்டங்கள் வைத்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அந்த செயல் திட்டத்தை உங்களிடம் கூறி விட்டால் அதை நாங்கள் எப்படி ? செயல்படுத்துவது. எம்.பி தேர்தலில் ஆங்கில தொலைக்காட்சிகளில் நேரலை வைத்து இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் நாங்கள் மக்களை சந்தித்து தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் களத்தில் நாங்கள் மக்களுடைய இருக்கிறோம். மக்களிடம் இருப்பதை எங்களுக்கு தேர்தல் தான். யார் ? யாரோடு ? கூட்டணி சேர்ந்தாலும் கோவையில் வெள்ளப் போவது நாங்கள் தான். தேர்தல் முடிவு அன்று நான், உங்களோடு தான் இருப்பேன் அன்று பாருங்கள்” என்று கூறினார்.
கட்சிக்குள் எந்த பாகுபாடும் எங்களுக்குள் இல்லை. கோவை மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை நிச்சயம் வென்று காட்டுவோம் என கூறினார்.