தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்தநிலையில் இன்று பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் 'ராமதாஸின் பாமக அணியும், தேமுதிகவும் திமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ''இந்த கூட்டணியில் யார் யாரெல்லாம் சேர்வது என்பது குறித்து முடிவு செய்வது தலைமை. அதுவும் எங்களுடைய கட்சியில் உங்களுக்கே தெரியும் கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு என்பதுதான் எங்களுடைய தாரக மந்திரம். அதனால் முதலமைச்சர் அதை முடிவு செய்வார். ஒன்றுபட்டு செல்கிறோம் 2026 இல் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கூட்டணி கணக்கை வைத்துச் சொல்லவில்லை.

இந்த ஐந்தாண்டு காலத்தில் மக்களுடைய பயன்பாட்டிற்கு என்னென்ன தேவைகளோ அதை திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொகுதியின் பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றையும் தாண்டி இந்த முதலமைச்சர் குடும்ப பொருளாதார வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்களை நேரடியாக தந்துள்ளார். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தனிநபர் வருமானம் என்பது 1 லட்சம் தான் இருந்தது. இன்று இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தனிநபர் வருமானம் என்பது மூன்று லட்சத்து ஐயாயிரம் ஆக கூடியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு குடும்பத்தில் இருப்பவர்களும் தமிழ்நாட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என எண்ணும் நிலைதான் இருக்கிறது' என்றார். 

Advertisment