கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17-09-25) திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் திமுக தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து மாநாட்டு மேடை வரை ரோடு ஷோ போன்று வாகனத்தில் இருந்தவாறு கையை அசைத்தவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக திமுக முப்பெரும் விழா தொடங்கியுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த தலைவர்களுக்கு நினைவுப் பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கினார்.
இதனையடுத்து ஏற்கனவே விருது அறிவிக்கப்பட்ட கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழிக்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவரும், தணிக்கை குழு முன்னாள் உறுப்பினருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருதும், அண்ணாநகர் முன்னாள் பகுதி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சோ.மா. ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், கட்சியின் மூத்த முன்னோடி தலைமைச் செயற்குழு உறுப்பினர் நினைவில் வாழும் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டது.
கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், சட்டமன்ற முன்னாள் கொறாடவுமான மருதுார் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலுார் நா. பழனிசாமிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார் முன்னதாக முப்பெரும் விழாவுவிற்கு வருகை தந்த திமுக தொண்டர்களை காவல்துறையின் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.