'மழையில் நனைந்து சேதமடைந்த  2 லட்சம் ஏக்கர் நெல் பயிர்களுக்கு இழப்பீடு எங்கே?' என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களின் அளவு குறித்து அரசு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவதால், உழவர்களை ஏமாற்ற திமுக அரசு முயல்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

Advertisment

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று  அக்டோபர் 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதேநாளில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  வேளாண்துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால், அதன்பின் 35 நாள்களாகியும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. மழை பாதிப்புகளை கணக்கிட 35 நாள்கள் என்பது மிக அதிக காலம் ஆகும். தமிழக அரசிடம் உள்ள தொழில்நுட்பம், மனிதவளம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இக்கணக்கெடுப்பை எப்போதோ நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால், பயிர்களுக்கான இழப்பீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் உழவர்களுக்கு எதிரான சதி இருப்பதாகவே தோன்றுகிறது.

Advertisment

காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. ஆனால், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தனர். அந்த இழப்பீட்டைக் கூட தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை.

உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவே திமுக அரசு அவதாரம் எடுத்து வந்திருப்பதாக ஆட்சியாளர்கள் அவர்களாகவே போலி புகழுரைகளை சூடிக் கொள்வார்கள். ஆனால், உழவர்கள் நலனுக்காக துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள். நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மிகக்குறைந்த கொள்முதல் நிலை நிர்ணயித்தது,  கொள்முதலுக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகளை சரியான நேரத்தில் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என  உழவர்களுக்கு திமுக அரசு செய்த துரோகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது'' என தெரிவித்துள்ளார்.