கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, திமுக பொதுச் செயலாளரும், அப்போது முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனையடுத்து ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி திமுக மற்றும் திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி தொடர்புடைய வழக்குகளின் விசாரணையும், துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையும், வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த விசாரணை மத்திய சர்க்கிளுக்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (18.09.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் வாதிடுகையில், “கட்சியின் பொதுச் செயலாளரின் வருமான வரி கணக்கு வேறு. திமுகவின் வருமான வரி கணக்கு வேறு ஆகும்.
எனவே இந்த இரண்டையும் வருமான வரிகளின் மத்திய தரப்பில் விசாரிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவுக்கு திமுக அறக்கட்டளை பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி தொடர்பான வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித்துறையினருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.