சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை, திருத்துறைப்பூண்டி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் இன்று (10.12.2025) சந்தித்துப் பேச அனுமதி கேட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு, “என்னுடைய தொகுதி பிரச்சனையைக் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க வேண்டும்” என அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஆடலரசன் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த ஆடலரசன் தன்னுடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வீசி எறிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆடலரசன், “நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு அனுமதி மறுக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து ஆடலரசன், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரது தொகுதி பிரச்சனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வரைச் சந்திக்க முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us