Advertisment

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு ஒத்துழைக்காத திமுக நிர்வாகிகள்;  பொதுமக்கள் விரக்தி!

104

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பெறுவதற்கு வசதி செய்யப்படுகிறது. சமூக நலத்துறை, வருவாய்த் துறை, மின்சாரத் துறை, கூட்டுறவுத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவத் துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், தனித்தனி ஸ்டால்கள் அமைத்து, முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு, பட்டா மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை 40 நாட்களுக்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

Advertisment

இந்த முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த முகாம்களில், சில இடங்களில் திமுக ஆட்சி என்பதால், திமுகவினர் சிலர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை எங்கு கொடுக்க வேண்டும், எந்தத் துறைக்காக மனு அளிக்க வந்துள்ளீர்கள் என்பதைக் கேட்டு, அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அடிப்படை உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள லால்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள சிவம் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில், பொதுமக்கள் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், காலையிலிருந்து ஏராளமானோர் முகாமிற்கு வந்திருந்தனர். ஆனால், அரசு அலுவலர்கள் அமர்ந்தபடி பணிகளைச் செய்து வந்தபோது, எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், சரியான விவரம் தெரியாதவர்கள் மனுவை எங்கு கொடுப்பது எனக் கேட்டபோது, அலுவலர்கள் “அங்கே போய்க் கொடுங்கள்” என்று கைகாட்டி அனுப்பி விடுகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியது.

103

முகாமிற்கு பொறுப்பாக உள்ள திமுக நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட துறைகளின் ஸ்டால்கள் எங்கு உள்ளன என்று தெரியாமல் திகைத்து நின்றவர்களுக்கு வழிகாட்டவில்லை. இதனால், பலர் விரக்தியடைந்து திரும்பிச் சென்றதாகவும் கூறுப்படுகிறது. மேலும், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மனு அளிக்க யாரும் வரவில்லை. வருவாய்த் துறையில் 25 மனுக்களை, குறிப்பாக பட்டா மாற்றத்திற்காக, பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் துறையில் மனு அளிக்க யாரும் வராததால், அலுவலர்கள் கதை பேசிக்கொண்டிருந்தனர். அதேபோல், சமூக நலத்துறையில் இரண்டு பேர் மட்டுமே மனு அளித்ததாகக் கூறுகின்றனர். இதுபோன்ற முகாம்கள் நடைபெறுவது குறித்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்சியினர் பொதுமக்களுக்கு சரியாகத் தெரிவிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

காலையில் முகாமைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அதன்பிறகு, முகாமில் என்ன நடைபெறுகிறது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கவனிக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திமுகவினரிடம் விசாரித்தபோது, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முகாம் நடைபெறும் வரை செய்ய வேண்டும் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், சிலர் அதைப் பின்பற்றாததால் பொதுமக்கள் மத்தியில் இதுபோன்ற கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

dmk Chidambaram mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe