'DMK election manifesto in 10 days' - Kanimozhi interview Photograph: (dmk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ''இன்னும் ஒரு பத்து நாட்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை முழு வடிவம் பெற்று முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நிச்சயமாக விரைவில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். முதலமைச்சர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையாலும், திராவிட இயக்க கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரே தலைவர் என்ற நம்பிக்கை மற்றும் திமுகவின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையாலும் தான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். யார் உண்மையாக திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், திராவிட மாடல் ஆட்சி தரக்கூடியவர்கள் யார் என்பது தெளிவாக மக்களுக்கு தெரிகிறது.
இன்னொருவருக்கு பதில் சொல்லக் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று அவசியம் திமுகவிற்கு இல்லை. யார் தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தான் தமிழ் மக்களின் நம்பிக்கை உரியத் தேர்தல் அறிக்கையாக இருக்கும். அதனால் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைத் தேர்தல் அறிக்கையில் கொண்டு வருவோம்'' என்றார்.
Follow Us