கிருஷ்ணகிரியில் திமுக நகராட்சி தலைவரை அதிமுக உதவியுடன் திமுக கவுன்சிலர்கள் வீழ்த்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக திமுகவைச் சேர்ந்த பரிதா நவாப் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், நகராட்சித் தலைவர் பரிதா நவாப்பின் செயல்பாடுகள் அரசுக்கும், நகராட்சிக்கும் எதிராக உள்ளது என புகார் அளித்து கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். அந்த புகாரில் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Advertisment

இந்த நிலையில், நகராட்சித் தலைவர் பரிதா நவாப்புக்கு எதிராக இன்று (10-11-25) நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடைபெற இருந்தது. அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு பேருந்து மூலம் திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலர்,  உள்ளிட்டோர் வந்தனர். அப்போது, அதிமுக கவுன்சிலரான நாகஜோதி என்பவரை திமுகவினரை கடத்தி வைத்துள்ளதாகக் கூறி அதிமுக நகரச் செயலாளர் கேசவன் தலைவர்கள் பேருந்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிமுக எம்.எல்.ஏ அசோக் குமார் தலைமையிலான அதிமுகவினர் நகராட்சி நுழைவுவாயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விருப்பப்படி தான் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன் என நாகஜோதி கூறியதை தொடர்ந்து, கூட்டம் கலைந்து சென்றது.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் காலை 11 மணிக்கு நகராட்சி கூட்டம் தொடங்கியது. 2 மணி நேர விவாதத்திற்குப் பிறகு நகராட்சித் தலைவர் பரிதா நவாப்புக்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் 1 பேர், சுயேட்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் 1 பேர் என மொத்தம் 27 பேர், பரிதா நவாப்பிற்கு எதிராக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து, பரிதா நவாப்பிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய நகர்மன்ற தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம்
 சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment