DMK councilor orders sanitation workers No whistle blowing here
ஆளுங்கட்சியான திமுகவை புதிதாக களமிறங்க இருக்கும் விஜய்யின் தவெக கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், சட்டமன்றத் தேர்தலுக்காக தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், குப்பையை சேகரிக்கும் போது விசில் ஊதக்கூடாது என திமுக கவுன்சிலர் ஒருவர் தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையில் பின்புறம் உள்ள 21வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அயுப் கா என்பவர் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இனிமேல் ஒலிப்பெருக்கு மூலம் சேகரிக்க வேண்டும் என்றும் இனி தன் வார்டில் விசில் ஊதக் கூடாது என்ற உத்தரவை போட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவில் திமுக கவுன்சிலர் அயுப் கான் நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் பேசியதாவது, ‘அதிகாலையில் சூரியன் உதித்த உடனே பொதுமக்களிடம் இருந்து குப்பைகளை சேகரிப்பதற்காக நம்முடைய சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக வருகிறார்கள். அவர்கள் வரும் போது அவர்கள் கொண்டு வருகிற அந்த விசில் சத்தம் இனிமேல் இந்த வார்டில் வேண்டாம். அதற்கு பதிலாக குப்பைகளை சேகரிப்பதற்கு உண்டான பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பானை நாம் கொடுத்திருக்கிறோம். இனிமேல் நம்ம வார்டில் இந்த சத்தம் தான் கேட்கணும். அந்த விசில் சத்தம் இனிமேல் கேட்கக்கூடாது என்று அறிவுறுத்திருக்கிறோம்” என்று கூறி தூய்மை பணியாளர் ஒருவர் தனது கழுத்தில் போட்டிருந்த விசிலை வாங்கிக் கொண்டு ஒலிப்பான் ஒன்றை கொடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us