வேலூர் மாநகராட்சியில், குண்டும் குழியுமான தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியதால், 49-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாதன், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை அமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேங்கிய மழைநீரில் உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அப்பகுதி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த மேயர் சுஜாதாவிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேயர் சுஜாதா, “இந்தச் சாலையை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம், விரைவில் பணி தொடங்கும்,” எனக் கூறினார். 

ஆனால், பொதுமக்கள், “இதுபோல அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை. எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை,” எனக் குற்றம்சாட்டி, மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.