Advertisment

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி விவகாரம் : இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

p-chidamram-mks

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த தேர்தலைப் போலவே 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே வழங்க முடியும் என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அதே சமயம் இந்த பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் 41 முதல் 45 இடங்களைக் கேட்ட காங்கிரஸ், தற்போது 35 முதல் 40 இடங்களாவது வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று (03.03.2026) நேரில் சந்தித்துப் பேசினார். அதாவது திமுக - காங்கிரஸ் இடையே நிலவி வரும் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது எனக் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இணைந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் ப. சிதம்பரம் இந்தச் சந்திப்பை மேற்கொண்டார்.

Advertisment

மற்றொருபுறம் தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை அறிவிக்க நேற்று காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. முன்னதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ப. சிதம்பரம் நேரடியாக முதல்வரைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்பின் போது 29 சட்டமன்றத் தொகுதிகள் 2 ராஜ்யசபா இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க தி.மு.க. முன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் 39 சட்டமன்ற தொகுதிகள் என்பதில் இருந்து சற்று இறங்கி வந்த காங்கிரஸ் 36 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. 

selvaperunthagi-pm-5

இந்த சந்திப்பிற்குப் பிறகு, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.  அதில், “தகவல் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டு  இருக்கிறோம். இது தொடர்பாகப் பேசி முடித்த பிறகு சொல்வோம். திமுகவில் இருந்து எவ்வித கெடுவும் விதிக்கவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அடிக்கடி முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்கிறோம் அதே மாதிரிதான் சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. அதற்காகவே நாங்கள் அங்குச் சென்றோம். 

இதில் யூகங்களுக்கோ, பேச்சுவார்த்தைகளுக்கோ இடமில்லை. அனைத்தும் சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. நான் கட்சியின் ஒரு தொண்டன் (சிப்பாய்). கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்றுவேன். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி (AICC) தான் இறுதி முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (04.03.2026) மீண்டும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியானது திமுகவின் 29 இடங்கள் என்ற கோரிக்கையை ஏற்குமா?. அல்லது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mk stalin Selvaperunthagai P chidambaram dmk congress Assembly Election 2026 Alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe