தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த தேர்தலைப் போலவே 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே வழங்க முடியும் என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அதே சமயம் இந்த பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் 41 முதல் 45 இடங்களைக் கேட்ட காங்கிரஸ், தற்போது 33 முதல் 35 இடங்களாவது வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
மற்றொருபுறம் மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை மறுதினத்துடன் (05.03.2026) முடிவடைவதால், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கக் காங்கிரஸிற்கு இன்று (03.03.2026) வரை திமுக கெடு விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் திமுகவின் 25 இடங்கள் என்ற கோரிக்கையை ஏற்குமா அல்லது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராகுல்காந்தி, சோனியா, கார்கே, வேணுகோபால் ஆகியோருடன் காணொலி வாயிலாகக் காங்கிரஸ் ப.சிதம்பரம் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செல்வப்பெருந்தகையுடன் ப.சிதம்பரம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நீடித்து வரும் இழுபறி மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. இது கொள்கை சார்ந்த இயற்கையான கூட்டணி. கூடுதல் இடங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றுதான்” என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த கோரிக்கைகளில் காங்கிரஸ் தற்போது மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us