சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க. உள்ளிட்ட ஆதரவு கவுன்சிலர்கள் 17 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேரும் உள்ளனர். உமாமகேஷ்வரி தி.மு.க.வின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே அவரும் அவரது கணவரும் பினாமியாக டெண்டர்கள் எடுத்து பெயரளவுக்கே வேலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நகரின் மொத்த வார்டுகளின் கட்டமைப்புப் பணிகள், சுகாதாரம் உள்ளிட்டவைகள் சீர்குலைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதில் அதிருப்தியான ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள் உள்ளிட்ட மொத்த கவுன்சிலர்களும் சேர்மனிடம் வார்டு குறைகளைச் சொல்லி நிவர்த்தி செய்ய கேட்டும் அவர் காது கொடுத்து கேட்கவில்லையாம். இதனால் ஆளுங்கட்சி உட்பட எதிர்கட்சி கவுன்சிலர்களும் சேர்மன் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.
“ஒரு கட்டத்திற்குப் பிறகு சேர்மன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவிருக்கிறோம்..” என்று தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் 2022ல் அப்போதைய கமிசனரிடம் அஜண்டா கொடுத்திருக்கிறார்கள். அந்த தீர்மானம் விவாத்திற்கு வரும் முன்பே கட்சித் தலைமையின் அறிவுறுத்தலால் விவகாரம் பேசி முடிக்கப்பட்டு உமாமகேஷ்வரியே சேர்மனாகத் தொடர்ந்து நீடித்திருக்கிறார். தன் மீதான கவுன்சிலர்களின் அதிருப்தியைத் தெளிவாகத் தெரிந்தும் சேர்மன் உமாமகேஷ்வரி நகராட்சிப் பணிகளில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்திருக்கிறார். இதனால் வார்டு பணிகளில் மேலும் தொய்வு ஏற்பட்டு அது பெரியவிவகாரத்தைக் கிளப்பியிருக்கிறது. இதில் விரக்தி அடைந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விலுள்ள 24 கவுன்சிலர்களும் ஒன்றாக இணைந்து ஜூன் 02 அன்று சேர்மன் உமாமகேஷ்வரி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அவர் நம்பிக்கையை இழந்து விட்டார் எனவே சேர்மன் கவுன்சிலைக் கூட்டி தன் மீதான நம்பிக்கையை நிரூபிக்க வேண்டுமென்று தற்போதைய பொறுப்பு கமிஷனர் நாகராஜனிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். நகரில் தகிப்பைக் கிளப்பிய இந்த விவகாரத்தை ஏற்கனவே நக்கீரனில் விரிவாகவே வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 02 அன்று மன்றத்தில் விவாதத்திற்கு வந்திருக்கிறது. 30 கவுன்சிலர்களில் 29 கவுன்சிலர்கள் ஆஜராகினர். தீர்மானம் விவாதத்திற்கு விடப்பட்டதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆளுங்கட்சியின் சேர்மன் தன் பதவியை இழந்தது பரபரப்பு பேச்சாகியிருக்கிறது.
ஆளுங்கட்சி சேர்மன் பதவிக்கே பங்கம் வந்தால் அது பேசு பொருளாகிவிடும். அதனால் விவகாரத்தை பேசி முடியுங்கள் என்று கட்சித் தலைமை வலியுறுத்தியும் கூட அதையும் மீறி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது நகரின் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.