மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களில், 9 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, விவசாய சங்கப் பிரதிநிதிகள், சிறு, குறு தொழில் முனைவோர், நகர்நல சங்கத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடினார். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

Advertisment

இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, ஸ்ரீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கோகுல இந்திரா, செம்மலை, சிவபதி, வளர்மதி, ரத்தினவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து, விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது: “விவசாயப் பணி கடினமானது; அதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளையும், கஷ்டங்களையும் நன்கு அறிவேன். ஆனால், முதல்வராக இருந்தபோது, அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அந்தந்தத் துறைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்து துறைகளும் முக்கியமானவைதான். வேளாண் துறை கடினமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உணவும் நீரும் மனிதனின் அடிப்படைத் தேவைகள். தட்டுப்பாடற்ற தண்ணீர் விவசாயிகளின் அடிப்படைத் தேவையாக உள்ளது. தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் மேற்கொள்ள முடியும். அதிமுக அரசு நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தியது. 

இதை முதன்மையான ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்டு செயல்படுத்தினோம். இந்த அமைப்பு மூலம், பருவகாலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் நீரை அளவீடு செய்தோம். ஏரி, குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு, தூர்வாரப்பட்டன. கடலில் வீணாகக் கலக்கும் நீரைச் சேமிக்கும் வகையில், எங்கெங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதைக் கணக்கெடுத்தோம். ஆனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேட்டூரில் தொடங்கி, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடங்களில் நான்கு இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், திமுக அரசு பதவியேற்றவுடன் அதை ரத்து செய்துவிட்டது. மேட்டூர் அணையைத் தூர்வாரி, நாளொன்றுக்கு ஐந்தாயிரம் லாரிகள் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டது. அதேபோல், 14,000 ஏரிகள் கணக்கிடப்பட்டு, 6,000 ஏரிகள் தூர்வாரப்பட்டன. பருவகாலங்களில் பெய்த மழையால், தூர்வாரப்பட்ட ஏரிகள் மூலம் அதிகப்படியான நீர் சேமிக்கப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள் பயனடைந்தனர். குடிநீர்த் தேவையும் பூர்த்தியானது. 

Advertisment

விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்புக்கு மத்திய அரசுதான் விலை நிர்ணயம் செய்யும். மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனாலும், தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத் தொகைகளை வழங்குகிறது. விவசாயிகள் விளைவிக்கும் விளைப்பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கை மத்திய அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில், மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 48 கோடி ரூபாய் செலவில் ரசாயனப் பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதனால், விவசாயிகள் நல்ல விளைச்சல் பெற்றனர். மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட மக்காச்சோளம், இப்போது 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் லாபமடைகின்றனர். விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. சிறு, குறு தொழில்கள் நிறைந்த மாநிலமாக இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே, அதைப் பாதுகாப்பது எனது கடமை,” என்றார்.