திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு ஆகியோர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, "தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மக்களோடு இருந்து இதுவரை, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதற்காக ’தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரைப் பயணத்தைத் தலைமை கழகம் அறிவித்திருக்கிறது. மக்களுடன் இருந்து மக்களோடு வாழ்ந்து மக்களுடைய வீடுகளிலேயே உணவருந்தி அவர்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்களை விளக்கமாக சொல்லி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளைக் களையெடுப்பதற்காக இந்தப் பரப்புரைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 2021 ஆம் ஆண்டு கழக அரசு அமைந்த பிறகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி, அனைத்துதரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம் ஆகிய மூன்று துறைகளில் அனைத்து மக்களுக்குமான பல நல்ல திட்டங்களை வழங்கி இருக்கிறது. பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். காலையில் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க சிரமப்படுகிற நிலையை மாற்றும் வகையில் மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலை உணவை வழங்கி வருகிறார். இதன் மூலம் இடைநிற்றல் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
பல்வேறு பணிகளுக்கு செல்கிற பெண்களுக்குக் கிடைக்கிற ஊதியம் குறைவாக இருக்கும் அதே நேரத்தில் அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கும். இது போன்ற நிலையில் பெண்களுக்கு சிரமம் ஏற்படும். இதை தடுப்பதற்காக விடியல் பயணம் என்ற பெயரில் தமிழ்நாட்டு பெண்கள் தங்களுடைய பணிக்குக் கட்டணமின்றி சென்று வருவதற்கான திட்டத்தை அறிவித்தார். பெண்கள் பொதுவாக தங்களுடைய தேவைகளுக்காக தங்களுடைய கணவரையோ, பிள்ளைகளையோ நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதை தடுப்பதற்காக அவர்களுடைய சுய தேவைகளுக்காக மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும்’ முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாதவர்களுக்கு ‘இல்லம் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் வீட்டுக்கே மருத்துவ உதவியை வழங்கக்கூடிய திட்டத்தையும் அறிவித்து அதுவும் நடைமுறையில் இருக்கிறது. இப்படி அனைத்து தரப்பிலும் முக்கியமாக கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட துறைகளில் பல சீரிய திட்டங்களை கழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால், இதற்கு உரிய ஒத்துழைப்பை, ஒன்றிய அரசு வழங்குகிறதா என்றால் இல்லை. குறிப்பாக மாநில அரசுகளின் மிகப்பெரிய நிதி வருவாய் என்பது விற்பனை வரியின் மூலம் காலங்காலமாக கிடைத்து வந்தது. ஆனால் இந்த பாஜக அரசு விற்பனை வரி என்பதையே நிறுத்திவிட்டு ஜிஎஸ்டி என்ற பெயரில் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து வரும் வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறது.
நேரடியாக மக்களுக்கு செய்ய வேண்டிய பல திட்டங்களை மாநில அரசுதான் செய்ய வேண்டும். கல்வி, மருத்துவ வசதி, வீடு வழங்குதல், உணவு வழங்குதல், பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை எல்லாம் செய்கிற அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது.
ஆனால் ஒன்றிய அரசுக்கு வெளியுறவு, படைகளை நடத்துவது, விமானம் செலுத்துவது இது போன்ற துறைகளின் அதிகாரம்தான் இருக்கிறது. நேரடியாக மக்களுக்கு திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுக்கு நிதி தராமல் வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு; எதை கேட்டாலும் தர முடியாது என்கிறது.
எங்களுடைய திட்டத்துக்கு கட்டுப்பட்டால்தான் எங்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாங்கள் நிதி தருவோம் என்று ஒரு அமைச்சரே வந்து இங்கே சொல்லி இருக்கிறார்; இல்லையென்றால் தரமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்; மாநிலங்களை வஞ்சிக்கிறார்.
இப்படிப்பட்ட அரசு ஒன்றியத்தில் இருக்கும் பொழுது இதையும் மீறி தமிழ்நாட்டு மக்கள்தான் முக்கியம் என்ற அளவில் தமிழ்நாடு அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறப்பாக நடத்திச் செல்கிறார். ஒன்றிய அரசு துரோகம் செய்கிற அரசாக இருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமரே இங்கு வந்து எய்ம்ஸ் என்ற ஒரு மருத்துவ கல்லூரியை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்; இன்றுவரை எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. மருத்துவ கல்லூரி வரவில்லை என்றால் யாரை ஏமாற்ற பிரதமர் இங்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் எப்பொழுது வந்தாலும் மக்கள் இவர் இந்த முறை எதை சொல்லி ஏமாற்ற போகிறாரோ என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் மீது தங்களுடைய வெறுப்பை காட்டுகிறது. தமிழர்களின் பெருமையை சொல்லக்கூடிய தமிழர்களின் தொன்மையை சொல்லக்கூடிய கீழடி ஆய்வை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு என்று எந்த திட்டத்தையும் வழங்குவதில்லை.
தமிழ்நாட்டுக்கு ரயில்வேயில் இவ்வளவு தந்தோம் என்று சொல்கிறார்கள். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு எட்டு கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். காசி ரயில் நிலையத்தை புனரமைப்பதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டுக்கு என்றால் ஒரு வகையிலும் வட மாநிலங்களுக்கு என்றால் ஒரு வகையிலும் செயல்படுகிற அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.
இந்த பாஜக அரசு தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணிக்கிறது. மதக் கலவரங்களை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25, மனசாட்சிப்படி நடந்து கொள்ளும் உரிமை, எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமை இவற்றை வழங்கி இருக்கிறது. அது அடிப்படை உரிமை. ஆனால் அதை மீறி இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு இருக்கிறது. இது போன்ற விஷயங்களில் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகிற அரசாக, மக்களிடம் அமைதியையும் ஒற்றுமையையும் குலைக்கிற அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.
இது போன்ற ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எங்களுடைய சாதனைகளை குறித்த பிரச்சாரத்தையும் எங்களுடைய கழகத்தின் முன்னணி சொற்பொழிவாளர்கள் 22 பேர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் தொகுதிவாரியாக சென்று மக்களிடையே எடுத்து சொல்ல இருக்கிறார்கள். அதற்காக ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பிலே இந்த பிரச்சார பயணம் நாளை முதல் (01-02-2026) தொடங்குகிறது" என்றனர்.
Follow Us