அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 உட்பிரிவு 7 மற்றும் 25 உட்பிரிவு 2 இன்படி, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (10.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகையில், ''எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்து இதுவரை ஒவ்வொரு முறை தேர்தலிலும் மக்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டுதான் நம்மை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் அப்படி அல்ல. 1996 தேர்தலிலே கலைஞர் வெற்றி பெறுகிறார் என்று சொன்னால் விபத்தில் வருகிறார். 1986 தேர்தலில் வெற்றி பெறுகிறார் என்று சொன்னால் விபத்திலே வருகிறார். ஒவ்வொரு முறையும் மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் நம்முடைய இயக்கம் ஒவ்வொரு முறையும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆட்சி அமைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தயவுசெய்து இந்த தேர்தலில் நம் எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளையும் ஒழித்து விட வேண்டும். ஏனென்று சொன்னால் ஏற்கனவே சண்முகம் சொன்னார் இந்த இயக்கத்திற்கு வரலாறு உண்டு.
எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கிய பொழுது கட்சியில் இணைந்து அமைச்சர் பதவி பெற்றவர்கள் கூட ஒரு கட்டத்திற்கு மேல் வெளியேறினார்கள். வெளியேறும்போது கட்சியை துவக்கி பார்த்தார்கள். கட்சி அழிந்துவிடும் என நினைத்தார்கள் இல்லை. அதேபோல் ஜெயலலிதா பொறுப்பிற்கு வருவற்கு முன்பாகவே பல்வேறு அரசியல் தலைவர்கள், நம்முடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் கூட எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஆட்சியிலே சுவைத்துவிட்டு ஆட்சியை விட்டு வெளியேறிய பின்பு கட்சியை துவக்கி பார்த்தார்கள். அவர்களும் அழிந்தார்கள் காணாமல் போய்விட்டார்கள். அதேபோல்தான் இன்று தொண்டர்களில் ஒருவராக இருந்து, தொண்டராக இருந்து, கிளைச் செயலாளராக இருந்து, ஒன்றிய செயலாளராக இருந்து, அமைப்புச் செயலாளராக இருந்து, கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து இப்படி படிப்படியாக உருவாகி, தலைவருடைய நன்மதிப்பை பெற்று, இரண்டு கோடி தொண்டருடைய உணர்வோடு பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை பெற்ற பொதுச்செயலாளரை வீழ்த்த வேண்டும் என்று துரோகிகள் முயற்சி செய்கிறார்கள்.
எப்படி எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வெளியேறி எம்ஜிஆரை வீழ்த்த வேண்டும் என்று முயற்சி செய்து தோற்றார்களோ, எப்படி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சுவைத்து விட்டு வெளியேறி ஜெயலலிதாவை, விமர்சனம் செய்து வீழ்த்த வேண்டும் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விட்டார்களோ அதே நிலைதான் இன்று நம்மை எதிர்க்கும் துரோகிகளுக்கும் வரும். வருகின்ற 2026 தேர்தலுக்கு பின்பு அவர்கள் காணாமல் போவார்கள். அப்படி காணாமல் போவதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் அப்பழுக்கற்ற நிலையிலே போராட வேண்டும். எதிரியை நாம் எதிரியாக பார்க்க வேண்டும். எதிரியை நண்பராக பார்த்தால் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எதிரியை எதிரியாக பார்த்து இந்த தேர்தலை சந்தித்து மீண்டும் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் இரண்டாவது முறையாக தமிழகத்தினுடைய முதலமைச்சராக அரியணை ஏறுவதற்கு நாம் பாடுபடுவோம். அடுத்த பொதுக்குழு, செயற்குழுவில் நம்முடைய எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தினுடைய முதலமைச்சராக ஆக்குவோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/10/a5774-2025-12-10-16-34-50.jpg)