DMK begins election campaign in all 234 constituencies
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், தனது அடுத்த கட்ட தேர்தல் பணியை திமுக தொடங்கியுள்ளது. அதாவது ‘தமிழ்நாடு தலைகுணியாது’ என்ற தலைப்பில் பிப்ரவரி 1 முதல் 234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20.01.2026 நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பரப்புரையின் கீழ், கழகத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஒரு பொதுக் கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள் / மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும். ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us