முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான அன்வர் ராஜா கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.கவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். முன்னதாக திமுகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அன்வர் ராஜா சென்றிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் அன்வர் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் “அண்ணாவின் கொள்கைக்குப் புறம்பாக அதிமுக இருக்கிறது. அதிமுக, தனது கொள்கையில் இருந்து தடம்புரண்டு தற்போது பா.ஜ.கவின் கையில் சிக்கியிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் அதில் பா.ஜ.க இடம் பெறும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவாகக் கூறிவிட்டார். 3 முறை பேட்டியளித்த அவர், ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் எனக் குறிப்பிடவில்லை.
10 நாட்களாக எடப்பாடி பழனிசாமி டூர் பிரோகிராமைச் செய்து கொண்டு வருகிறார். அந்த 10 நாளும், நான் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என உறுதிப்படுத்தவே அவரால் முடியவில்லை. அந்தளவுக்குத் தான் அவருடைய நிலைமை இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் அன்வர்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக சட்டதிட்ட விதி 31, பிரிவு: 10அ இன் படி திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பதவியில் இந்திரகுமாரி என்பவர் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.