தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.
அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் இனைந்தது. முன்னதாக திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் அமைத்துள்ள குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.
குழு உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச்செயலாளர், திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us