Advertisment

தனியார் கொள்ளைக்கு துணை போகும் திமுக-அன்புமணி கண்டனம்

283

DMK-Anbumani condemns aiding private robbery Photograph: (pmk)

'தனியார் பால் விலை உயர்வு மூலம் தனியார் நிறுவன கொள்ளைக்கு துணை போகும் திமுகவின் ஊழல்' என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளன.  ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி தீர்க்கும் பால் விலையை தனியார் நிறுவனங்கள் விருப்பம் போல உயர்த்தி வரும் நிலையில், அதை தடுக்க வேண்டிய திமுக அரசு, அதன் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கொள்கைப்படி தனியார் நிறுவனங்களில் கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தமிழ்நாட்டில் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் நிறுவனங்களில் ஒன்று சாதாரண மக்கள் பயன்படுத்தும் 3% கொழுப்புச் சத்துக் கொண்ட நீல உறை பாலின் விலை லிட்டருக்கு 52 ரூபாயில் இருந்து 62 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலை 63 ரூபாயிலிருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.68 ஆக்கப்பட்டுள்ளது. 6% கொழுப்புச் சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலை 72 ரூபாயில் இருந்து ரூ. 4 சேர்த்து ரூ.76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவினில் 3% கொழுப்புச் சத்துள்ள நீல உறை பால் லிட்டர் ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள்  ரூ.22 கூடுதலாக விற்பனை செய்கின்றன. அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44&க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை ரூ.24 கூடுதலாக ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6% கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டர் ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள்16  உயர்த்தி ரூ.76-க்கு விற்பனை செய்கின்றன.

விழுக்காடு கணக்கின் அடிப்படையில் பார்த்தால் நீல உறை, பச்சை உறை பால்களின் விலை ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்களில் 55% அதிகமாக உள்ளது. அதாவது இந்த வகை பால்களை தனியார் நிறுவனங்களில் 2லிட்டர் வாங்குவதற்கு ஆகும் செலவில் ஆவின் நிறுவனத்தில் 3 லிட்டர் பாலை வாங்க முடியும். ஆவின் நிறுவனத்துடன் ஒப்பிடும் போது தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரை  அதிகமாக இருக்கலாம். ஆனால், தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.24 கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது  பகல் கொள்ளை ஆகும். இதை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது எட்டாவது முறையாகும். கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் பால் விலை 55% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்துவதற்கு எந்த வித நியாயமான காரணங்களும் இல்லை. மக்களைச் சுரண்டி அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தனியார் நிறுவனங்கள் பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்துகின்றன. தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வெகுமதிக்காக தவம் கிடக்கும் திமுக அரசும் இந்த இரக்கமற்ற பகல் கொள்ளையை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

தமிழக அரசு நினைத்தால் தமிழ்நாட்டில் தனியார் பால் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பல மாதங்களாக கூறி வரும் பா.ம.க, அதற்காக இரு வழிகளையும் பரிந்துரைத்து வருகிறது. முதலாவது தமிழ்நாட்டில் பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதாகும். தனியார் பால் நிறுவனங்களின் பால் உற்பத்திச் செலவை கணக்கிட்டு, அவற்றின் பாலுக்கான விலையை ஒழுங்கு முறை ஆணையமே நிர்ணயிக்கும். அதனால், தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்த முடியாது.

பால் விலையை கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கை ஆவின் பால் நிறுவனத்தின் சந்தைப்  பங்கை அதிகரிப்பது ஆகும். தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தை நிர்வகிக்கும் பால் வளர்ச்சித்துறை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகியும் கூட, அதன் சந்தை பங்கு 16 விழுக்காட்டை தாண்டவில்லை. பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால் தான் அவற்றின் ஆதிக்கத்தை அரசால் தடுக்க முடியவில்லை. மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க உழவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அவர்களிடமிருந்து  பால் கொள்முதல் செய்து, விற்பனையை அதிகரித்தால் பால் சந்தையில் 50 விழுக்காட்டை ஆவின் நிறுவனத்தால் கைப்பற்ற  முடியும் . அத்தகைய வலிமையான நிலைக்கு ஆவின் உயர்ந்தால் தான் பால் சந்தையில் தனியார் நிறுவனங்களின் விலைக் கொள்ளையை தடுக்க முடியும். இதை கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வரும் போதிலும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அதற்குக் காரணம், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊழல் திமுக அரசு மறைமுகமாக துணை நின்று வருவது தான்.

மக்களைச் சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும். மக்கள் நலனை அடகு வைத்து விட்டு, தனியார் நிறுவனங்களுக்கு துணை போகும் திமுகவை மக்கள் கடுமையாக தண்டிப்பார்கள்' என தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss milk pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe