DMK alliance takes a decision against SIR in Tamil Nadu
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், கடந்த 4ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முதல் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கை டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று பிப்ரவரி 7ஆம் தேதியன்று வரைவு வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிடவுள்ளனர். தமிழகத்தில் திருத்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்கள் தொடர்பாக அரசியல் கட்சியின் பூத் ஏஜெண்டுகளுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் இடையே ஆங்காங்கே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு (SIR) எதிராக போராட்டம் நடத்துவதற்கு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிமுடிவு செய்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் திட்டத்தை செயல்படுத்துவது மூலம் மக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகும். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தினால், தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலானோர் கிராமப்புற மக்களாக விவசாயிகளாக இருப்பதால் இந்த கணக்கீடு படிவங்களை பெற்று நிரப்பி திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது. இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், வருவாய்த்துறை கனமழையால் எழும் சூழ்நிலைகளை கையாளுவதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் கணக்கெடுப்பதற்கு உகுந்த காலம் இல்லை. எனவே கூட்டணி கட்சி சார்பாக அறிக்கை விடுத்தும், அனைத்து கட்சிகள் கூடி இது குறித்து சொல்லியும் எந்தவித முன்னேற்பாடும் நடக்கவில்லை. எனவே, வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற கூட்டணி கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us