மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ (விபி ஜி ராம் ஜி) என்ற பெயரில் திட்டத்தை மாற்றியமைத்ததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, இந்த புதிய மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டு புதிய திட்டம் செயல்பட இருக்கிறது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இன்று (24-12-25) தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. அதாவது, மகாத்மா காந்தியினுடைய பெயரை மறைக்கக்கூடிய வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், இந்த புதிய சட்ட மசோதாவில் மாநில அரசு மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் பா.ஜ.க அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை மேடவாக்கத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “காந்தியின் பெயர் அவர்களுக்கு அறவே பிடிக்காது. காந்தி மீது அவர்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு இருக்கிறது. அதனால் தான், காந்தியை சிறுமைப்படுத்த வேண்டுமென்று பட்டேலுக்கு மிக உயரமான சிலையை நிறுவிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக பட்டேல் பேசினாலும், அந்த அமைப்பை அவர் தடை செய்தாலும், அவரை தங்களுக்கான கொள்கை சார்ந்த தலைவராக கருதுகிறார்கள். காந்தியை சிறுமைப்படுத்துவதற்காகவே காங்கிரஸ் தலைவரான பட்டேலுக்கு அந்த கும்பல் மிக உயரமான சிலையை நிறுவிருக்கிறார்கள். காந்தியின் அடையாளங்கள் எங்கு இருந்தாலும் அதை ஒழிக்க நினைக்கிறார்கள். திட்டங்கள், ரூபாய் நோட்டில் காந்தி படம், பெயர் உள்ளதால் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், காந்தியை சிறுமைப்படுத்த 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர். காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். மாநில அரசுக்கு நிதிச்சுமையை உண்டாக்கி அவர்களாகவே இந்த திட்டத்தை கைவிடும்படியான சூழ்நிலையை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/24/100dayswork-2025-12-24-11-44-48.jpg)