வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இதே திராவிட முன்னேற்றக் கழக தலைவர், இன்றைய முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நேரடியாக அவர்களைச் சந்தித்து அவர்களோடு தேநீர் குடித்து அவர்களிடத்தில் பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதை நம்பி தூய்மைப் பணியாளர்கள் வாக்களித்து திமுக ஆட்சிக்கு வந்தது.

Advertisment

இன்று மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் போராடி வருகிறார்கள். நீங்கள் தானே அதிமுக ஆட்சியில் நேரடியாக வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தீர்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சொன்னீர்கள். அதை நிறைவேற்ற வேண்டும் என்று நான்காண்டுகளாக மனு கொடுத்து, மனு கொடுத்து எந்த பிரதிபலனும் இல்லாத காரணத்தினால் போராட்டத்தில் இறங்கினர்.

10 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து பல மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் கேட்பது என்ன? திமுக தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நேரடியாக சென்று தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதானே? ஆனால் ஓட்டுகளைப் பெறுவதற்காக ஸ்டாலின் அந்த வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்களை சமாதானப்படுத்துவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

அவர்கள் கேட்கும் கோரிக்கை வேறு இவர்கள் கொடுத்த அறிவிப்பு வேறு. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இரவோடு இரவாக காவல்துறை நடத்திய அப்புறப்படுத்தல் முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது. மனித உரிமை மீறல். அதைக் கேள்வி கேட்கச் சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்கொண்டு அலைக்கழிப்பது வெட்கித் தலைகுனிய  வேண்டிய நடவடிக்கை' என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் எம்பி கேட்டுள்ளார்.

Advertisment

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் சண்முகம், 'தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். அதற்குப் பதிலாக காலை உணவு கொடுப்பதாக , வீடு கட்டி தருவதாக,  இறந்தவர்களுக்கு காப்பீடு நிதி வழங்குவதாக  அறிவித்துள்ளீர்கள். அவர்கள் கேட்பது வேறு நீங்கள் தெரிவிப்பது வேறு' எனச் சொல்லியுள்ளார். இப்பொழுது தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ரோஷம் வருகிறது. இத்தனை நாட்களாக ரோஷம் வரவில்லை. இப்பொழுது தான் வந்திருக்கிறது'' என்றார்.