DMK alliance announces struggle against BJP government for 100-day work plan
மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடந்த 16ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை கொடுக்க திட்டமிட்டிருந்தாலும், 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத மாநில அரசும் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ (விபி ஜி ராம் ஜி) என்ற பெயரில் திட்டத்தை மாற்றியமைத்ததால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதா தொடர்பாக கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற மக்களவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 98 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசிய நிலையில், நேற்று (18-12-25) குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகள் கிடைத்ததால் அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் மாற்றியமைத்து புதிய திட்டம் செயல்பட இருக்கிறது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. அதாவது, மகாத்மா காந்தியினுடைய பெயரை மறைக்கக்கூடிய வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், இந்த புதிய சட்ட மசோதாவில் பல குளறுபடிகளும் மாநில அரசு மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் பா.ஜ.க அரசை கண்டித்து டிசம்பர் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு மற்றும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவை கண்டித்தும் அன்றைய தேதியில் சென்னை மற்றும் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
திமுக தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
Follow Us