கோப்புப்படம்
மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (05.03.2026) கடைசி நாள் ஆகும்
மற்றொருபுறம் திமுக கூட்டணியில் நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸுக்கு தலா 1 மாநிலங்களவை சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களை தி.மு.க. தலைமை அறிவித்தது. அதில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோன்று அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதில் முன்னாள் மத்திய அமைச்சரான தம்பிதுரை அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அதாவது தி.மு.க. கூட்டணியில் மொத்தமுள்ள 4 இடங்களில் தி.மு.க. 2 இடத்திற்கும், காங்கிரஸ், தே.மு.தி.க. தலா ஒரு இடங்களில் போட்டியிட உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க. தலா இடங்களில் போட்டியிட உள்ளன. அதில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தே.மு.தி.க.வின் மாநிலங்களவை வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் அறிவிக்கபட்டுள்ளார். இதற்கான உத்தரவை பிரமலதா விஜயகாந்த் பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தம்பிதுரை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதே போன்று அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Follow Us