தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.08.2025) தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள கோபால் நகரில் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்விற்கு முன்னதாக தண்டையார்பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த திட்டத்தில் பயணடைந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். மற்றொருபுறம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சுற்றுப் பயணத்தில் பிரேமலதா கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “விஜயகாந்த் எப்போதுமே தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே சொன்னார். அந்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் அப்படியென்று விஜயகாந்த் சொன்னார். அன்றைக்குக் கேலி பேசிய அனைத்து கட்சிகளும் இன்றைக்குத் தமிழக அரசு அதில் ஒரு முயற்சியாகத் தாயுமானவர் என்ற திட்டத்தின் மூலம் முதியவர்களுக்கு லாரியில் வைத்து ரேசன் பொருட்களைக் கொண்டு வந்து விநியோகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இது விஜயகாந்த்துக்குக் கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.