தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே சமயம், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘இல்லம் தேடி உள்ளம் நாடி’ என்ற பெயரில் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்நிலையில் தேமுதிக கட்சி சார்பில் அக்கட்சியின் தென் சென்னை பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (31.08.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டார். முதலமைச்சராக இருந்தவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்பினோம் . ஆனால் ஏமாற்றி விட்டார். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையழுத்திடுவது இல்லை. அதே போன்று தான் தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்திலும் தேதி குறிப்பிடாமல் ஒப்பந்தம் ஏற்பட்டது . அதனால் தான் தற்போது ஏமாந்து விட்டோம். அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திற்கு காசு கொடுத்துதான் மக்களை அழைத்து வருகிறார்கள். ஆனால் நாம் அப்படி செய்யவில்லை” எனப் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.