தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால்,சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேமுதிக பொருளரும், பிரேமலாதவின் சகோதரருமான எல்.கே. சுதிஷ் முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், பிரேமலதவின் புகைப்படத்தை ஒன்றாக இணைத்து வெளியிட்டுள்ளார். 

Advertisment

அதில் ஜெயலலிதாவை போன்றே, பிரேமலதாவும் கையை உயர்த்திய நிலையில் காண்பிக்கும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' என்ற பெயரில்  சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதே சமயம் கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்புகளில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

அதோடு அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்தபோது  ஒரு மாநிலங்களவை எம்பி இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இறுதியில் அதிமுக தலைமை அதை மறுக்க, அதிருப்தியில் இருந்த பிரேமலதா அதன் காரணமாகவே கூட்டணி முடிவுகளை தள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பிரேமலதா விஜயகாந்த்தை திடீரென  சந்தித்துப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Advertisment