தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன..
இத்தகைய சூழலில் தான், விரைவில் நல்ல கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாகக் கூட்டணி தொடர்பான பேச்சுக்கள் அனல் பறந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி, “திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் அதிமுக மற்றும் திமுக என இரு தரப்பினரிடமும் 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்களையும் தேமுதிக கேட்பதாகவும் தகவல் வெளியானது.
அதற்கு திமுக தரப்பில் 8 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்களையும் அளிக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் 6 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்களையும் கொடுக்க முன்வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் 10 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்களையும் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தேமுதிக தற்போது 10 தொகுதிகள் வரை இறங்கி வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தற்போதைய சூழலில் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/arivalayam-dmdk-office-2026-01-30-14-55-26.jpg)