கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அம்மாநில சட்டமன்றத்தில் சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற அவையின் போது, கடந்த ஜூன் 4ஆம் தேதி கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கேள்விகள் எழுப்பினர். டி.கே.சிவகுமார் சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தி அந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், ‘கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராகவும், பெங்களூருவின் பொறுப்பாளர் அமைச்சராகவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். நான் ஆர்.சி.பி அணியை வாழ்த்தினேன், நானும் கோப்பையை முத்தமிட்டேன். நான் என் வேலையைச் செய்தேன். இது போன்ற விபத்துகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளன” என்று கூறிக்கொண்டு திடீரென பா.ஜ.கவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பாடலை பாடினார். இதனை கேட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து தங்கள் மேசைகளை தட்டி சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே பா.ஜ.க எம்.எல்.ஏ சுனில் குமார் எழுந்து நின்று, ‘இந்த வரிகள் பதிவுகளில் இருந்து நீக்கப்படாமல் இருக்கட்டம்’ என நகைச்சுவையாகக் கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவகுமார், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பாடலை பாடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் டி.கே.சிவகுமார், பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் பரவி காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “நான் அனைத்து அரசியல் கட்சிகள் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளேன். கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ், எவ்வாறு நிறுவனங்களை உருவாக்குகிறது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மாவட்டம் மற்றும் தாலுகாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் கையகப்படுத்துகிறார்கள். நான் ஒரு காங்கிரஸ்காரன், காங்கிரசில் இருப்பேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியதற்காக டி.கே.சிவகுமார் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.கே.சிவகுமார், “சில நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டி பிரச்சினை குறித்து பேசும் போது, ​​நான் அவர்களின் பிரார்த்தனையின் மூன்று வாக்கியங்களைப் பாடினேன். அவர்களைப் புகழ்வது எனது நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு 47 வயதில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றேன். காங்கிரஸ், காந்தி குடும்பம், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் வரலாற்றை விரிவாகப் படித்துள்ளேன். அரசியல் ஆதாயத்திற்காக எனது வார்த்தைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நான் கருத்து தெரிவித்தேன், எதிர்க்கட்சியை இழுக்க முயற்சித்தேன். எனது நண்பர்கள் சிலர் அதிலிருந்து அரசியல் பாய்ச்சலை எடுத்து, அதைப் பயன்படுத்தவும், தவறாகப் பயன்படுத்தவும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். காந்தி குடும்பத்தை யாராலும் கேள்வி கேட்க முடியாது. நான் காங்கிரஸ் காரனாக பிறந்தேன், நான் ஒரு காங்கிரஸ்காரனாகவே இறப்பேன்.

Advertisment

கட்சியின் உயர்மட்டக் குழுவின் அழுத்தத்தால் நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. யாராவது காயமடைந்திருந்தால், அவர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக அல்ல. மேலும் எனது கருத்துகள் குறித்து சில கட்சி சகாக்கள் கருத்து தெரிவித்தது எனக்கு பிடிக்கவில்லை. காந்தி குடும்பம் எனது அரசியல் பக்திக்கு மையமாக இருக்கிறது. காந்தி குடும்பம் எனது கடவுள், நான் ஒரு பக்தன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கீழ் நான் 30 வருடத்திற்கு மேலாக நான் பணியாற்றி வருகிறேன். மகாத்மா காந்தியின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 100 காங்கிரஸ் பவன்கள் கட்ட முன்மொழிந்தேன். அவர் கட்சியின் கோயில்கள். நான் இங்கு இருக்கிறேனா? எவ்வளவு காலம் இங்கு இருப்பேன்? எவ்வளவு காலம் நான் உயிரோடு இருப்பேன் என்பது முக்கியமல்ல. நான் எனது கட்சியின் வரலாற்றை நிலைத்திருக்க விரும்புகிறேன். இது தான் கட்சிக்கான எனது அர்ப்பணிப்பு” என்று கூறினார்.