கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெங்களூருவில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு சில மாதங்களுக்கு முன்மொழிந்தது.

Advertisment

இந்த திட்டத்திற்கு பெங்களூரு தெற்கு பா.ஜ.க எம்.பியான தேஜஸ்வி சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதனால் மாநில அரசையும், இந்த திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், சுரங்கப்பாதை சாலை திட்டம் ஐடி தலைநகரின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு ஒரு நீண்டகால தீர்வு என்று டி.கே சிவகுமார் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறார். இருப்பினும், சுரங்கப்பாதை சாலை திட்டம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்றும் பெங்களூருவின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு அல்ல என்றும் சூர்யா வாதிடுகிறார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், சுரங்கப்பாதை சாலை திட்டத்தை கைவிட்டு, பொது போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.பி தேஜஸ்வி சூர்யா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை நேற்று (28-10-25) நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும், இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தீர்வு ஆகாது என்பது தொடர்பான சில பரிந்துரைகளை அவர் வழங்கினார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய டி.கே.சிவகுமார், கார்கள் இல்லாத ஆண்களுக்கு மக்கள் தங்களுடைய மகள்களை திருமணம் செய்து வைப்பதில்லை என்று கூறியது தற்போது மாநிலத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது, “மக்கள் கார்களை வாங்குவதற்குப் பின்னால் உள்ள சமூகக் கடமைகளை தேஜஸ்வி சூர்யா புரிந்து கொள்ளவில்லை. உங்கள் வாகனத்தை கொண்டு வருவதை நான் தடுக்க முடியுமா? இது சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த விஷயம். மக்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்கள் சொந்த வாகனங்களில் பயணிக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்துவதை நாம் தடுக்க முடியுமா? தேவைப்பட்டால், எம்.பிக்கள் தங்கள் தொகுதி மக்களிடம் தங்கள் கார்களை வீட்டிலேயே விட்டுவிட்டு பொது போக்குவரத்து வாகனத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கலாம். எத்தனை பேர் உண்மையில் அதைப் பின்பற்றுகிறார்கள் என்பதை பார்ப்போம். இன்று கார் இல்லாத ஒரு பையனுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க மக்கள் தயங்குகிறார்கள்” என்று கூறினார். இவருடைய பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisment

டி.கே.சிவகுமாரின் கருத்து குறித்து பதிலளித்த தேஜஸ்வி சூர்யா, இத்தனை நாட்களாக, சுரங்கப்பாதை திட்டம் பெங்களூரு போக்குவரத்து சிக்கலைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது என்ற தவறான எண்ணத்தில் இருந்தேன். இப்போது, ​​கார் இல்லாத ஒருவரை மக்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஒரு சமூகப் பிரச்சினையைத் தீர்க்க இது நோக்கம் கொண்டது என்று டி.கே.சிவகுமார் தெளிவுபடுத்தியுள்ளார். நான் எவ்வளவு முட்டாள்” என்று தெரிவித்துள்ளார்.