இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக தொடங்கும் என ரயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அன்றையத் தினம் காலை 8 மணி முதல் ரயில் நிலைய கவுண்ட்டர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடைசி நேர இட நெருக்கடியைத் தவிர்க்கப் பயணிகள் விரைந்து ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதோடு முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்குக் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் அதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ரயில் டிகெட் முன்பதிவு இன்று (18.08.2025) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதாவது அக்டோபர் 17ஆம் தேதிக்கான டிக்கெட்கள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும் அக்டோபர் 18ஆம் தேதிக்கான டிக்கெட்கள் முன்பதிவு நாளை (19.08.2025) காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது. அக்டோபர்19ஆம் தேதிக்கான டிக்கெட்கள் முன்பதிவு புதன்கிழமை (20.08.2025) காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.