இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (20.10.2025) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை நேற்று (17.10.2025) சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இயக்கத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம், பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் சுஞ்சோங்கம் ஜாதக் சிரு, போக்குவரத்து ஆணையர் கஜலட்சுமி. அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன், கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் தசரதன் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நிர்வாக அலுவலர் பால்பிரின்சிலி, சென்னை மாநகர போக்குவரத்து கழக துணை மேலான் இயக்குநர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்காக அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (17.10.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,975 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு ஆக கடந்த (16.10.25 முதல் 17.10.25 வரை) நேற்று நள்ளிரவு 24.00 மணி வரை 6,920 பேருந்துகளில் 3,59,840 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.