Diwali demand- turmeric price hike Photograph: (erode)
தீபாவளி பண்டிகை காரணமாக தேவை அதிகரித்து ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை ரூ.500 வரை குவிண்டாலுக்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது, 'கடந்த இரு மாதங்களாக மஞ்சள் விலை உயராமல் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 500 முதல் ரூ.13,250 வரை நீடித்தது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலமாக உள்ளதால் தேவை அதிகரித்து விற்பனையும் அதிகரித்தது. நேற்று முன்தினம், நேற்று விரலி மஞ்சள் ரூ.13,800 - 14,100 ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக குவிண்டாலுக்கு 500 ரூபாய்க்கு உயர்வாகும். கிழங்கு மஞ்சளும் அதே விலை உயர்வு கண்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின் மஞ்சள் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
கீழ்பவானி ஆயக்கட்டு நில பாசனதாரர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி கூறும்போது ''பண்டிகை காலமாக தொடர்வதால் மஞ்சள் தேவை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் அதிக மழையால் விளைச்சல் பாதித்துள்ளது.எனவே அந்த விலை குறைவதால் நல்ல மஞ்சள் ஈரோட்டுக்கு வரத்தாகி உள்ளது. இருப்பினும் ஈரோடு மஞ்சளுக்கான விலை குறையாது என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.