திருப்பத்தூரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆற்றைக் கடந்து காட்டுக்குள் இறைச்சி சமைத்து சாப்பிடுவதற்காக சென்ற குடும்பத்தினர் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டு தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது தகரக்குப்பம் எனும் கிராமம். இந்த பகுதியில் வசித்து வரும் பெருமாள் என்பவர் தன்னுடைய குடும்பத்தாருடன் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மொத்தம் 19 பேராக பாலாற்றை அடுத்துள்ள வனப்பகுதிக்கு இறைச்சி எடுத்து சமைத்து சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர். இதில் முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் சென்றுள்ளனர்.
ஆற்றைக் கடந்து செல்லும் பொழுது ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்த நிலையில் அவர்கள் உணவு சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு வர முயன்ற போது திடீரென பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மறுகரைக்கு வர முடியாமல் குடும்பத்தினர் தத்தளித்து நின்றிருந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் அங்கு வந்து மீட்புப் படையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி அனைவரையும் பத்திரமாக மீட்டு வந்தனர். இதில் மூன்று குழந்தைகள், மூதாட்டி உள்ளிட்ட மொத்தம் 19 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.