நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை (இன்று) மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில் சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சொந்தவூர் செல்ல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் ஐந்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகப்படியானோர் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஜவுளி மற்றும் பனியன் கம்பெனிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை மற்றும் பீகார் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் வரை செல்லும் தன்பாத் ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக காவல்துறையும் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.