ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (18.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே பேசிய தவெக தலைவர் விஜய், “பொதுவாக நல்ல காரியம் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் எடுத்து வைத்து துவங்குவார்கள். நம் வீட்டில் உள்ள பெண்கள் கூட, நாம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் புடவை கட்டி தான் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். மஞ்சள் என்றாலே தனி வைப். நம் கொடியில் கூட மஞ்சள் இருக்கிறது. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு பூமி.
இந்த ஈரோடு மண் விவசாயத்துக்கும் பேர் போன மண். இங்கு நடக்கும் விவசாயத்துக்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது என்ன தெரியுமா? காலிங்கயராயன் அணையும், காலிங்கயராயன் கால்வாயும் ஆகும்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணரும், தி.மு.க, தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தெரிவிக்கையில், “ஈரோடுக்கு வந்து விட்டோம் என்று யாரோ சொல்லி காளிங்கராயன் கால்வாய் பற்றி விஜய் பேசி இருக்கிறார். அது போன்று நீர் மேலாண்மை செயல்படுத்துவேன் என்றும் வாயால் வடை சுடுகிறார்.
500 கோடி சம்பளத்தை விட்டுட்டு மக்களுக்காக வந்துவிட்டார் என்று பெருமை பேசுகிறார்.
உங்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் 70 மருத்துவர்கள் 1750 பொறியாளர்கள், 700 துணை மருத்துவர்கள் , 750 டிப்ளமோ 3320 கலை அறிவியல், 105 மற்ற தொழில் வல்லுநர்களை உருவாக்கி இருக்கிறார். அவரது முன்னோர்கள்தான் காளிங்கராயன் கால்வாய் கட்டியவர்கள். அதுதான் மக்கள் நலம். ஒரு படத்துக்கு 500 கோடி சம்பளத்தை விட்டுட்டு வந்த விஜய் 10 பேருக்கு நோட்டு புத்தகம், தையல் எந்திரம் கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என்று பீலா விடுகிறார். சூர்யாவிடம் போய் விஜய் கற்றுக்கொள்ளட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us