Advertisment

விஜய்யின் பவுன்சர்களுக்கு திவ்யா சத்யராஜின் வேண்டுகோள்!

divya-sathyaraj

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் விஜய் தரப்பில் இருந்து நேற்று (30.09.2025) வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகளும், ஊட்டச்சத்து நிபுணரும், தி.மு.க, தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் இன்று அரசியல்வாதியாகப் பேச வரவில்லை. ஊட்டச்சத்து நிபுணராக ஒரு சில  விசயங்களைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. கரூர் மாதிரியான கூட்டத்தில் நீண்ட நேரம் வெயிலில் நிற்க நேரிடும் போது உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்,  உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படலாம். சர்க்கரை அளவு குறையாமல் இருக்க சாக்லேட்டோ,  இனிப்பு வகைகளையோ எடுத்துக்கொள்ளலாம்.

Advertisment

நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கத் தோளில் மாட்டிக்கொள்ளும் வகையிலான வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருப்பதால் தோளில் மாட்டிக்கொள்ளும் வகையிலான வாட்டர் பாட்டில் தான் எளிமையாக இருக்கும். அந்த வாட்டர் பாட்டிலில், கடைகளில் 25 ரூபாய்க்குக் கிடைக்கும் எல்க்ட்ரால் பாக்கெட்களை வாங்கி அதனை நீருடன் கலந்து குடிக்கலாம். அப்படி இல்லையென்றால் ஒரு ஸ்பூன் வெல்லத்தைக் குடிநீருடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். எலுமிச்சைப்பழம் மற்றும் உப்பைக் குடிநீருடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும். 

விஜய்யின் பாதுகாவலருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ஒரு பழைய வீடியோவில் விஜய்யின் பாதுகாவலர் ஒருவர், அக்கட்சியின் தொண்டரை வேனுக்கு மேல் இருந்து தூக்கி வீசியதைப் பார்த்தேன். அந்த பையனுக்கு முதுகுத் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டாலோ, தலையில் காயம் ஏற்பட்டாலோ, கோமாவிற்கு சென்றாலோ, அவர் வாழ்க்கையே போய் இருக்கும். த.வெ.க தொண்டர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். தொண்டர்களைத் தூக்கி வீசாதீர்கள். தொண்டர்களைப் பார்த்துப் பயப்படுகிறவர் உண்மையான தலைவர் கிடையாது. தொண்டர்களுக்குப் பாதுகாப்பு தருபவர் தான் உண்மையான தலைவர். மக்களை ஆள வேண்டும் என்று சொல்பவர் உண்மையான தலைவர் கிடையாது. மக்களுக்காகப் பல ஆண்டுகளாக வாழ்பவர் தான் உண்மையான தலைவர்” எனத் தெரிவித்துள்ளார்.

tvk vijay Tamilaga Vettri Kazhagam advice dmk divya sathyaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe