District Secretary's request for TVK leader Vijay going to Vellore
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அகரம்சேரி அருகே பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முறையான அனுமதி பெற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம், தவெக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் கடிதம் கொடுத்தார்.
அதன்பின் இதுக் குறித்து மாவட்டச் செயலாளர் வேல்முருகன் அளித்த பேட்டியில், “வரும் 23 ம் தவெக தலைவர் விஜய் வேலூர் வர உள்ளார். இதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் அவர்கள் உறுதிப்படுத்தி சொல்வதாக கூறியிருக்கிறார்கள். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை 100% கடைபிடிப்போம். மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவாறு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் என ஒரு மினி மருத்துவமனையே அமைத்துள்ளோம். 10 ஆம்புலன்ஸை நிறுத்த முடிவு செய்துள்ளோம், தன்னார்வலர்கள் குழு, மருத்துவம், கழிவறை, குடிநீர் வசதி என மக்கள் பத்திரமாக வந்து செல்ல தேவையான மக்கள் பாதுகாப்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.
தலைவர் விஜய் வரும் நேரம் குறித்து தலைமை கழகம் அறிவிக்கும். மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கு உட்பட்டு மக்கள் சந்திப்பு நடக்கிறது. ஒரு தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் வரை எதிர்பார்க்கிறோம். 33 ஏக்கரில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறோம். ஒவ்வொரு கேலரிக்கும் ஒரு குடிநீர் தொட்டி மற்றும் ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை வைக்க உள்ளோம். மிக முக்கியமாக வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வர வேண்டாம் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். இந்த நிகழ்வை காவல்துறை ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆறு இடத்தில் 20 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்துள்ளோம். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
கட்சி துவங்கி முதல் முறையாக விஜய், வேலூர் மண்ணுக்கு வருகிறார். இந்த வெற்றி மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். ஏனென்றால் பொதுவாக சொல்வார்கள், வேலூர் கோட்டையில் கால் வைக்கும் எல்லாருமே ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்கள் என அந்த வகையில் இந்த மண்ணுக்கு வந்த பிறகு அவருக்கு வெற்றி கிடைக்கும், வேலூர் என்றாலே வெற்றி தான். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாகத்தான் வேலூருக்கு வருகிறார். இளைஞர்கள் யாரும் அவரை வாகனத்தில் பின் தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். நம்ம ஊருக்கு நம்மை நம்பி வருகிறார், யாரும் அது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவருக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சி சிறப்பாக முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறினார். கடந்த வாரம் சேலத்தில் நடந்த கூட்டத்தில் வெயில் மற்றும் தண்ணிர் இல்லாததால் ஒரு வட இந்திய தொழிலாளி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விஜய் நடத்திய கூட்டத்தில் 52 பேர் இறந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us