புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஏம்பல் கிராமம். புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பல கிராம மக்கள் அதிகம் வந்து செல்லும் கிராமம். இங்குள்ள முன்னாள் மாணவர்கள் முயற்சியில் அரசுப் பள்ளிகள், சுகாதர நிலையம் மேம்படுத்தப்பட்துடன், பல ஆண்டுகளாக செயல்படாத வாரச் சந்தையை மீண்டும் செயல்பட வைத்தது, நீர்நிலை சீரமைப்பு என பல பணிகளை பெருமையோடு செய்துள்ளனர். இவர்களின் முயற்சியால் பல கிராமச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களின் நீண்ட கால கோரிக்கை புதுக்கோட்டை - சிவகங்கை ஆகிய இரு மாவட்ட கிராமப்புற ஏழை மாணவர்கள் தொழில் பயிற்சி பெற அரசு ஐடிஐ (தொழிற்பயிற்சி நிலையம்) அமைக்க வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த கல்வியாண்டில் ஏம்பல் ஐடிஐ யை அறிவித்தது. 108 மாணவர்களுக்கான இடங்களும், நிறுவன முதல்வராக குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறுகிய காலத்தில் 77 மாணவர்கள் சேர்க்கப்படுள்ளனர். இந்த ஐடிஐ க்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. புதிய ஐடிஐ யை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கானொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
இதில் அமைச்சர்கள், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், முதலமைச்சர் கானொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த போது, அமைச்சர்கள் சென்னையிலும், சட்டடமன்ற உறுப்பினர் வெளிநாட்டிலும் இருந்ததால் அவர்கள் கலந்து கொள்ளமுடியவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் துரையரசபுரம் அரசு பாலிடெக்னிக் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்றதால் ஏம்பல் ஐடிஐ தொடக்கவிழாவில் பங்கேற்கவில்லை. நிறுவன முதல்வர், அரிமழம் வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தங்களின கனவுத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதால் முன்னாள் மாணவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஆனால் ஐடிஐ சார்ந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாதது கிராம மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, எங்களின் பல ஆண்டுகால கனவுத்திட்டம் இந்த ஐடிஐ. இதனால் இரு மாவட்ட கிராமப்புற ஏழை மாணவர்கள் பயனடைவார்கள். இந்த ஐடிஐ யை முதலமைச்சர் கானொளி மூலம் திறந்து வைத்த போது மாவட்ட அதிகாரிகள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது வேதனை அளிக்கிறது. வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கூட பங்கேற்கவில்லை. ஏன் இப்படி புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவில்லை என்றனர்.