புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி கொத்தமங்கலம். இந்த ஊராட்சிக்கு கொரோனா நேரத்தில் இருந்து எல்.ஈ.டி தெருவிளக்குகள் அமைக்க ஆயிரக்கணக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள ஒரு அரசு கட்டடத்தில் வைத்துள்ளனர். இதே போல குடிநீர் ஆழ்குழாய் கிணறுகளுக்கான மோட்டார்கள், இரும்பு குழாய்கள், பழைய பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அஞ்சலகம் திறக்க கட்டடம் தேவை ஏற்பட்டதால் ஊராட்சி பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடத்தை சுத்தம் செய்வதாக கூறி அங்கிருந்த புதிய ‘எல்’ வடிவ தெருவிளக்கு அமைக்கும் இரும்பு குழாய்கள் (கட்டுக்கட்டாக இருந்த சுமார் 850) மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து கழற்றப்பட்ட பழைய 2 இரும்பு குழாய்கள் மற்றும் ஏராளமான பொருட்களை ஊராட்சி செயலர் மயில்வாகணன் முன்னிலையில் சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளனர். சரக்கு வாகனத்தில் ஏற்றிய எந்தப் பொருளும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கோ ஊராட்சியின் வேறு கட்டடங்களுக்கோ கொண்டு வராமல் அதே ஊரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் இறக்கியுள்ளனர். தெருவிளக்கு அமைக்கும் குழாய்களில் பாதியை பழைய இரும்புக்கடைகாரரின் குடோனுக்கும் கொண்டு போய் இறக்கி உள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், பழைய இரும்புக்கடை மற்றும் குடோனில் ஊராட்சி குழாய்கள் கிடப்பதை படங்கள் எடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிற்கு அனுப்பி புகார் செய்துள்ளனர். இந்த புகார் குறித்து மாவட்ட திட்ட இயக்குநர், உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார் என்று கூறியுள்ளார். அதன்படி இன்று (02-12-25) ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயசுதா மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்து பழைய இரும்புக்கடையில் விற்ற பொருட்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து பழைய இரும்புக்கடைகாரரின் குடோனில் இருந்து சுமார் 350 தெருவிளக்கு அமைக்கும் எல் வடிவ புதிய இரும்பு குழாய்களை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி மீட்டு வந்துள்ளனர். ஆனால் மேலும் உள்ள குழாய்கள், ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் எடுத்த பழைய இரும்பு குழாய்கள் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் மாவட்ட திட்ட இயக்குநரிடம் பழைய இரும்புக்கடைகாரர் ஊராட்சி குழாய்களை பாதுகாப்பிற்காக எங்கள் குடோனில் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். ஆனால் பொதுமக்களோ, ‘ஊராட்சியில் எவ்வளவோ இடமுள்ளது. கண்காணிப்பு கேமரா உள்ளது அப்படி இருக்கும் போது பழைய இரும்புக்கடை குடோனில் தான் ஊராட்சி பொருட்களை வைப்பார்களா? ஆட்சியர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததும் ஊராட்சி செயலரை காப்பாற்ற இப்படி சொல்கிறார்கள். மேலும் ஊராட்சி கட்டடத்தில் இருந்து ஏற்றிய பொருட்களில் பாதிதான் வந்துள்ளது மீதியையும் மீட்பதுடன் ஊராட்சி செயலர் மீது துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’ என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/irumb-2025-12-02-23-23-06.jpg)