திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ஆம் தேதி காலை 5 மணி அளவில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 266 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சுமார் 15,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மலையேற விரும்புபவர்களும் கிரிவலம் வருவார்கள் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மகாதீபத்தைக் கோவில் கொடிமரம் வளாகத்தில் இருந்து காண்பதற்காக உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் கட்டண டிக்கெட் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சுமார் 10,000 பேர் கோவில் வளாகத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பாஸ்கள் (Pass) வழங்கப்பட்டு வருகின்றன. இதில் போலி பாஸ்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாகவும், ஒரு பாஸ் 5,000 முதல் 10,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படிப்பட்ட புகார்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. போலி பாஸ்களைத் தடுக்க காவல்துறை தரப்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அவை போதாமையாகவே உள்ளன.
போலி பாஸ்கள் கோவில் பணியாளர்கள் என்கிறப் பெயரிலும், தன்னார்வலர்கள் என்கிறப் பெயரிலும் அதிக அளவில் தரப்படுகின்றன. இந்த ஆண்டு யாத்திரி நிவாஸ் கட்டிடத்தின் ஒரு தங்கும் அறையில் போலி பாஸ்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன என்கிறத் தகவல் வெளியாகியது. அதனையடுத்து, திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் தலைமையில் பாஜகவினர் மற்றும் பாமக நிர்வாகிகள் யாத்ரி நிவாஸ் பகுதியில் சென்று பார்த்தபோது, கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என்கிறப் பெயரில் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு பாஸ்களும் கார்ப் பாஸ்களும் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின் காவல்துறை விசாரணையில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த கார் ஓட்டுநர் சிலம்பரசன் என்பவரை போலீசார் விசாரணை வளையத்திற்குக் கொண்டுவந்து விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தீபத் திருவிழாவை வைத்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கின்றனர். இது ஒரு பெரிய நெட்வொர்க். கோவில் அதிகாரிகளும் இதில் உள்ளனர். தீவிரமாக இதை விசாரித்தால் பல முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள்; அது மட்டுமல்லாமல் பல ஊழியர்களும் சிக்குவார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
Follow Us