distressed passengers stage sit-in chennai airport for Delayed flights
சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று (02-11-25) காலை 6:30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணிப்பதற்காக தயாராக இருந்தனர்.
அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஓடுதளத்திலேயே, சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதனை தொடர்ந்து, கோளாறு சரிசெய்யப்பட்டு விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சில மணி நிமிடங்களிலெயே, விமான சக்கரம் உள்ளே செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனால் விமானம், வானத்திலேயே வட்டமடிக்க தொடங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர், விமானப் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் காத்திருக்க வைக்கப்பட்டனர். இருப்பினும், பல மணி நேரமாகியும் விமானம் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கால தாமதம் காரணமாக பயணச்சீட்டு கட்டணத்தை திருப்பி தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு முறையான பதிலை விமான நிறுவனம் அளிக்கவில்லை.
இதனால், விமானப் பயணிகள் சிலர் தங்கள் பயணத்தை ரத்து செய்து தங்களது வீட்டுக்கே சென்றனர். சில பயணிகள், விமான நிர்வாகத்திடம் முறையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை மூடவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
Follow Us