Dispute over placing banner tension due clash between two communities in sivaganga
பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியதால் சிவகங்கையில் கடும் பதற்றம் நிலவியுள்ளது,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இளமனூர் என்ற கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு இருக்கும் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குள் தங்களது சமூக தலைவர்களின் பேனர்களை வைப்பதில் நீண்ட வருடங்களாக மோதல் போக்கு நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதில் மூன்று வருடங்களுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் கமிட்டி போடப்பட்டு அனைத்து சமூகத்தினரும் கிராமத்தில் வசித்து வருவதால் குறிப்பிட்ட சமூக தலைவர்களின் பேனர்களை அகற்றும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு சமூக மக்கள் தங்களது பேனரை அகற்றாமல் இருந்துள்ளனர். அதனை தொடர்ந்து மற்றொரு சமூகத்தினர், தங்களது சமூக தலைவரின் பேனரை அந்த பேனருக்கு அருகில் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் மாறி மாறி கட்டைகளாலும் கற்களாலும் தாக்கிக் கொண்டனர். இதனால் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில், பெண்கள் உட்பட சிலருக்கு மண்டை உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர், காயங்களுடன் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட போலீசார், ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து இளமனூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  
 Follow Us